உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற நடவடிக்கை போலீஸ் கமிஷனர் பேச்சு


உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற நடவடிக்கை போலீஸ் கமிஷனர் பேச்சு
x
தினத்தந்தி 29 Jan 2020 4:15 AM IST (Updated: 28 Jan 2020 11:58 PM IST)
t-max-icont-min-icon

உலகிலேயே பாதுகாப்பான நகரமாக சென்னையை மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பரங்கிமலை பட்ரோட்டில் இருந்து போரூர் வரை ரூ.30 லட்சம் செலவில் 121 கண்காணிப்பு கேமராக்கள் தனியார் நிறுவன உதவியுடன் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களை பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் விழா நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமை தாங்கினார். தென்சென்னை இணை கமிஷனர் மகேஸ்வரி வரவேற்றார். இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்துகொண்டு புதிதாக அமைக்கப்பட்ட 121 கண்காணிப்பு கேமராக்களையும் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கியவர்களுக்கு சான்றுகளையும் வழங்கினார்.

பின்னர் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

சென்னையில் குற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் பொதுமக்களின் பங்களிப்புடன் 2½ லட்சத்துக்கும் மேல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி உள்ளோம். மெரினாவில் பலூன் விற்பவரின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண் ஒருவர் கடத்திச்சென்றார். ஏழை பெற்றோரின் துன்பத்தை போக்க, அந்த குழந்தையை மீட்டு கொடுக்க உதவியாக இருந்தது கண்காணிப்பு கேமராதான்.

பல சம்பவங்கள், பல வழக்குகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாக கண்டுபிடிக்கப்படுகின்றன. அதிகாலை 5 மணிக்கே நடைபயிற்சி செல்லும் தைரியத்தை தந்து உள்ளது. இதனால் குற்றங்கள் 50 சதவீதம் வரை குறைந்து உள்ளன.

கண்காணிப்பு கேமரா அமைக்கும் திட்டம் குறித்து ஆலோசனை வழங்கியவர் முதல்-அமைச்சர்தான். குற்றங்களை தடுக்க பொதுமக்கள் உதவியுடன் கேமராக்களை வைக்க முதல்-அமைச்சர் அறிவுரை வழங்கி, ஆதரவும் தந்தார். உலகத்திலேயே பாதுகாப்பான நகரமாக சென்னை இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரபாகர், போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story