8-வது திருமணம் செய்ய முயற்சி: “தொழில் அதிபரிடம் இருந்து மகளை மீட்டுத்தாருங்கள்” - நெல்லை போலீஸ் கமிஷனரிடம் பெற்றோர் புகார் மனு
தொழில் அதிபர் 8-வது திருமணம் செய்ய மறைத்து வைத்துள்ள எங்களுடைய மகளை மீட்டுத்தாருங்கள் என்று பெற்றோர் நெல்லை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தனர்.
நெல்லை,
சென்னை வடபழனியை சேர்ந்தவர் பஷீர். இவருடைய மனைவி பாத்திமா. இவர்களது 23 வயது மகள் நெல்லையில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
இந்த நிலையில் பஷீர் குடும்பத்தினர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோரை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனு மீது பாளையங்கோட்டை உதவி கமிஷனர் பெரியசாமி நேற்று விசாரணை நடத்தினார்.
இதற்காக பஷீர், பாத்திமா ஆகியோர் நேற்று உதவி கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு தங்களது மகளை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு கதறி அழுதனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “எங்களுடைய மகள் நெல்லையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். அப்போது ஒரு தொழில் அதிபர், மகளை திருமணம் செய்து கொள்வதாகவும், ஓட்டல், சூப்பர் மார்க்கெட்டுகளை தருகிறேன் என்றும் ஆசை வார்த்தை கூறி தனி வீட்டில் தங்க வைத்துள்ளார். அவருக்கு 65 வயதுக்கு மேல் ஆகிறது, ஏற்கனவே 7 பெண்களை திருமணம் செய்துள்ளார், தற்போது எங்களுடைய மகளை 8-வதாக திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்கிறார். இதை தடுத்து நிறுத்த வேண்டும்.
அவரிடம் இருந்து எங்களுடைய மகளை மீட்க சென்றபோது கொலை செய்து விடுவதாக மிரட்டி விரட்டி அடித்தார். எனவே, எங்களுடைய மகளை உடனடியாக மீட்டுத்தர வேண்டும்” என்று கூறினர்.
இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story