திண்டுக்கல்லில் இருந்து வாரந்தோறும், டெல்லிக்கு ரெயிலில் செல்லும் வெங்காயம்-வாழை இலை


திண்டுக்கல்லில் இருந்து வாரந்தோறும், டெல்லிக்கு ரெயிலில் செல்லும் வெங்காயம்-வாழை இலை
x
தினத்தந்தி 30 Jan 2020 4:00 AM IST (Updated: 30 Jan 2020 1:11 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் இருந்து வாரந்தோறும் டெல்லிக்கு ரெயிலில் சின்ன வெங்காயம், வாழை இலை அனுப்பி வைக்கப்படுகிறது.

திண்டுக்கல்,

தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரம் பாரம்பரியமானவை. தமிழகத்தை விட்டு வெளி மாநிலங்களுக்கு வேலைக்காக சென்றாலும் பண்பாட்டை மறப்பது இல்லை. அதோடு தமிழக உணவு முறையையும் கடைபிடிப்பது உண்டு. அதுவே தமிழர்களின் தனித்துவ அடையாளமாக உள்ளது. தமிழர்களின் பெரும்பாலான உணவுகளில் சுவையை கூட்டுவதற்கு சின்ன வெங்காயம் பயன்படுத்துவது வழக்கம்.

இதனால் தமிழரின் சமையலில் சின்ன வெங்காயம் முக்கிய இடத்தை பிடித்து விடுகிறது. ஆனால், வெளிமாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு சின்ன வெங்காயம் எளிதில் கிடைப்பதில்லை. அதிலும் வடமாநிலங்களில் பல்லாரி வெங்காயத்தை தான், சமையலில் அதிகம் பயன்படுத்துவார்கள். அதேபோல் வாழை இலையில் சாப்பிடுவதை தமிழர்கள் அதிகம் விரும்புவார்கள். அதுவும் வடமாநிலங்களில் எளிதாக கிடைப்பதில்லை.

எனவே, வடமாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு, தமிழகத்தில் இருந்து சின்ன வெங்காயம், வாழை இலை அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை திண்டுக்கல் மாவட்டத்தில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மேலும் திண்டுக்கல்லில் இருந்து வெளிமாநிலங்கள் மட்டுமின்றி இலங்கைக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அந்த வகையில் டெல்லியில் வசிக்கும் தமிழர்களுக்கு விற்பனை செய்வதற்காக, திண்டுக்கல்லில் இருந்து வாரந்தோறும் 1 டன் அளவுக்கு சின்ன வெங்காயம் ரெயிலில் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயம் மிகவும் குறைந்த அளவே அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விலை குறைந்துள்ளதால், மீண்டும் சின்ன வெங்காயம் அதிகமாக அனுப்பப்படுகிறது. அந்த வகையில் நேற்று 1 டன் சின்ன வெங்காயம், தலா 100 இலைகள் கொண்ட 20 கட்டு வாழை இலை ரெயிலில் புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story