ஈரோட்டில் துணிகரம்: கட்டிட காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை கொள்ளை
ஈரோட்டில், கட்டிட காண்டிராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 39 பவுன் நகை மற்றும் பட்டுப்புடவைகளை துணிகரமாக அள்ளிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் பூந்துறை பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 37). சிவில் என்ஜினீயர். இவருடைய மனைவி சாந்தி (36). இவர்களுக்கு பிருந்தாதேவி (6) என்ற பெண் குழந்தை உள்ளது. இவள் சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து 1-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஈரோடு சடையம்பாளையம் திருப்பதி கார்டன் 6-வது வீதியில் சசிக்குமார் குடும்பத்துடன் குடியேறினார். கட்டிட காண்டிராக்டரான இவர் பல்வேறு இடங்களில் கட்டிட ஒப்பந்த வேலை எடுத்து செய்து வந்தார். கடந்த 16-ந்தேதி வேலைவிஷயமாக சசிக்குமார் கோவைக்கு சென்று விட்டார்.
சென்னையில் வசித்து வந்த சாந்தியின் தாய் உடல் நலக்குறைவால் கடந்த 21-ந்தேதி இறந்து விட்டார்.
அதனால் சாந்தி வீட்டைப்பூட்டிவிட்டு சென்னைக்கு புறப்பட்டார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று சசிக்குமாரின் வீடு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து அவரது மனைவி சாந்திக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சாந்தி சென்னையில் இருந்து விரைந்து ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த 39¼ பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
ரூ.40 ஆயிரத்து 600 மற்றும் ஒரு மடிக்கணினி, 5 பட்டுப்புடவைகளையும் கொள்ளையர்கள் அள்ளிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சாந்தி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் சம்பவத்தன்று சுற்றுச்சுவர் ஏறிகுதித்து சசிக்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் மடிக்கணினி மற்றும் பட்டுப்புடவைகளை கொள்ளை அடித்துச்சென்றது தெரிய வந்தது.
மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story