வளசரவாக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 131 பவுன் நகை கொள்ளை
வளசரவாக்கத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் 131 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லி,
சென்னை வளசரவாக்கம், ராதா அவென்யூ 1-வது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 52). கட்டிட காண்டிராக்டரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்துடன் ஓட்டலில் சாப்பிட சென்று விட்டார்.
பின்னர் நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக் கிடந்தன.
பீரோ லாக்கரில் இருந்த 131 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. ஆறுமுகம், தனது குடும்பத்துடன் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் வெளியே உள்ள பெரிய கேட்டை எகிறி குதித்து உள்ளே புகுந்து, வீட்டின் மரக்கதவில் உள்ள பூட்டை உடைத்து லாக்கரில் இருந்த 131 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.
இது குறித்த புகாரின்பேரில் வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், அமுதா ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர். டிஸ்க்கையும் மர்மநபர்கள் எடுத்து சென்றுள்ளனர். அவரது வீட்டில் வளர்த்துவரும் நாய், கொள்ளையர்களை கண்டு நீண்ட நேரம் குரைத்துள்ளது.
ஆனால் அதை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இதனால் கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story