கணவன், மனைவிக்குள் போட்டி கூடாது - முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
கணவன்-மனைவிக்குள் போட்டி இருக்க கூடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
தேசிய மகளிர் ஆணையம் மற்றும் புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில் 100 அடி ரோட்டில் உள்ள கல்வித்துறை வளாகத்தில் மனநல கல்வி மேம்பாட்டிற்கான 2 நாள் பயிலரங்கம் நடக்கிறது. இதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது.
விழாவிற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி பயிலரங்கத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் வக்கீலாக பணிபுரிந்த போது கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினை காரணமாக அவர்கள் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு வருவார்கள். அப்போது பேசி சமரசம் செய்து அனுப்பி வைக்கப்படும். அதில் சமரசம் ஏற்படவில்லை என்றால் தான் விவாகரத்து வழங்கப்படும்.
கணவன்-மனைவி இருவரில் யார் பெரியவர் என்ற போட்டியால் தான் பிரச்சினை ஏற்படுகிறது. அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டால் முதலில் மனநலம் பாதிக்கப்படும். வீட்டில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து சென்றால் எந்த பிரச்சினையும் இல்லை.
கணவன்-மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டு மகளிர் ஆணையத்திற்கு வரும் போது அவர்களை சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் ஆணையத்தின் செயல்பாடு நகரத்தோடு மட்டும் நின்று விடாமல் கிராமப்பகுதிக்கும் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மகளிர் ஆணைய தலைவி ராணி ராஜன்பாபு, உறுப்பினர் செயலர் ரத்னா மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிலரங்கம் இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது.
Related Tags :
Next Story