மத்திகிரி அருகே, மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தம்பதி பலி
மத்திகிரி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதி பலியானார்கள்.
மத்திகிரி,
கர்நாடக மாநிலம் பெங்களூரு இ.ஜி.புரா முனீஸ்வரா லேஅவுட் 26-வது கிராசில் குடியிருந்து வந்தவர். முனிகிருஷ்ணா (வயது 45). மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சந்தோஷா (38). கணவன், மனைவி 2 பேரும் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள டி.கொத்தப்பள்ளியில் உள்ள உறவினர் இல்ல கிரஹ பிரவேச நிகழ்ச்சிக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.
நேற்று காலை 11 மணி அளவில் ஓசூர் தாலுகா மத்திகிரி செவன்த்டே பள்ளி அருகில் வந்த போது எதிரே வந்த டிப்பர் லாரி அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார்சைக்கிளில் சென்ற முனிகிருஷ்ணா, சந்தோஷா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
அதில் சந்தோஷா படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். முனிகிருஷ்ணா படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் விபத்தில் பலியான முனிகிருஷ்ணா, சந்தோஷாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி தம்பதி பலியான சம்பவம் மத்திகிரி அருகே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story