சின்னமனூர், கடமலை-மயிலை, பெரியகுளம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு


சின்னமனூர், கடமலை-மயிலை, பெரியகுளம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 30 Jan 2020 10:15 PM GMT (Updated: 30 Jan 2020 3:54 PM GMT)

சின்னமனூர், கடமலை- மயிலை, பெரியகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

தேனி,

தேனி மாவட்டத்தில் மொத்தம் 8 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. கடந்த மாதம் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மூலம் ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த 11-ந்தேதி நடந்தது.

இதில், போடி, உத்தமபாளையம் ஆகிய 2 ஒன்றியக்குழு தலைவர் பதவியை அ.தி.மு.க.வும், கம்பம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பா.ஜ.க.வும் போட்டியின்றி கைப்பற்றியது. தேனி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

சின்னமனூர், கடமலை- மயிலை, பெரியகுளம் ஆகிய ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலுக்கு பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வராததால் மறுதேதி அறிவிப்பு இன்றி மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து இந்த ஒன்றியங்களில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தலை மீண்டும் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, இந்த 3 ஒன்றியங்களிலும் நேற்று மறைமுக தேர்தல் நடப்பதாக இருந்தது.

கடமலை-மயிலை ஒன்றியத்தை பொறுத்தவரை மொத்தம் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க.வுக்கு 7 கவுன்சிலர்களும், அ.தி.மு.க. வுக்கு 7 கவுன்சிலர்களும் உள்ளனர். இரு கட்சிகளும் சமபலத்துடன் உள்ளது.

சின்னமனூர் ஒன்றியத்தில் மொத்தம் 10 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், தி.மு.க. 6 இடங்களையும், அ.தி.மு.க. 4 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. ஆனால், 1-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஜெயந்தி அ.தி.மு.க.வில் இணைந்து விட்டார். இதனால், தி.மு.க.விடம் இருந்து பெரும்பான்மை பலம் கை நழுவியது.

பெரியகுளம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16 கவுன்சிலர் பதவிகளில் தி.மு.க. 8 இடங் களிலும், அ.தி.மு.க. 6 இடங் களிலும், அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. ஒரு இடத்திலும், அ.ம.மு.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. கவுன்சிலர் செல்வம் என்பவர் அ.தி.மு.க.வில் இணைந்து விட்டார். இதனால், அ.தி.மு.க. கூட்டணியில் கவுன்சிலர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. தி.மு.க. கவுன்சிலர்கள் எண்ணிக்கை 7 ஆக குறைந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 3 ஒன்றியங்களிலும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுவதில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இடையே இழுபறி நீடித்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று தேர்தலை நடத்துவதற்காக 3 ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தயார் நிலையில் காத்திருந்தனர். இந்த 3 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், தேர்தலில் பங்கேற்க கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை.

இதனால், கடமலை- மயிலை, சின்னமனூர், பெரியகுளம் ஆகிய 3 ஒன்றியங் களிலும் மீண்டும் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக் கான மறைமுக தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் கள் தெரிவித்தனர். தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் மற்றொரு நாளில் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கூறினர்.

Next Story