ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் நடத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு, கிராம சேவை மையம் முற்றுகை; போலீசாருடன் தள்ளுமுள்ளு
கடலூர் அருகே ஊராட்சி மன்ற துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடத்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கிராம சேவை மையத்தை முற்றுகையிட்டனர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம்,
கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது குமளங்குளம். இங்கு நடந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜெயலட்சுமி, விஜயலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை முடிவில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் வெற்றி சான்றிதழ் விஜயலட்சுமி பெயரில் வழங்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலட்சுமி தரப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பதில் 2 தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. வெற்றி சான்றிதழில் பெயர் மாற்றி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலட்சுமி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் ஓட்டு எண்ணிக்கையின்போது அஜாக்கிரதையாக செயல்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பிரமணியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையில் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்க விஜயலட்சுமி, வாண்டராசன்குப்பம் கிராம சேவை மையத்திற்கு வந்தபோது ஜெயலட்சுமி தரப்பினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி மன்ற தலைவராக அவர் பதவி ஏற்கவில்லை. ஆனால் 9 வார்டு உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊராட்சி மன்ற துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி குமளங்குளம் ஊராட்சி மன்ற துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கிராம சேவை மையத்தில் நேற்று நடந்தது. இந்த தேர்தலை நடத்துவதற்காக அதிகாரிகள் கிராம சேவை மையத்திற்கு வந்தனர்.
இதையறிந்த விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டுவந்து கிராம சேவை மையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் யார் என்று இதுவரையிலும் முடிவு செய்யப்படவில்லை. அவ்வாறு இருக்கும்போது துணை தலைவர் தேர்தலை எப்படி நடத்தலாம் என்று கூறினர். மேலும் அங்கு வந்த தேர்தல் அதிகாரிகளிடம் துணை தலைவர் தேர்தல் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு தேர்தல் அதிகாரிகள், இது தொடர்பாக முறைப்படி போலீசில் புகார் கூறுங்கள் என்றனர். இருப்பினும் விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் அங்கேயே திரண்டு நின்றனர். இதனிடையே ஜெயலட்சுமி தரப்பினரும் அங்கு திரண்டு வந்ததால் பதற்றம் நிலவியது.
இந்த நிலையில் வார்டு உறுப்பினர்கள் 9 பேரில் 7 பேர் மட்டுமே தேர்தலில் பங்கேற்க வந்தனர். 2 பேர் வரவில்லை. ஆனால் 7 வார்டு உறுப்பினர்களையும் தேர்தல் நடந்த கிராம சேவை மையத்திற்குள் செல்ல விடாமல் விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் தடுத்தனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் ஆணையத்துக்குரிய அனுமதி கடிதம் உள்ளது. அவர்களை உள்ளே செல்ல விடுங்கள் என்றனர். இதனால் விஜயலட்சுமியின் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தள்ளு-முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் உஷாரான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் 12 பேரை மட்டும் பிடித்து, வேனில் ஏற்றி நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்தனர். இதனால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அதன் பின்னர் 7 வார்டு உறுப்பினர்களும் கிராம சேவை மையத்துக்குள் சென்றனர். அங்கு துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடந்தது. இதில் தேர்தல் அதிகாரியாக கதிர்வேல் செயல்பட்டார்.
துணை தலைவர் பதவிக்கு ஆனந்தி சேகர் மட்டும் மனுத்தாக்கல் செய்தார். எனவே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது பற்றி அறிந்ததும் விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு மீண்டும், கிராம சேவை மையத்துக்கு வந்தனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவியது. இதனிடையே பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் பதற்றம் தணிந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story