லாரி டிரைவர்களிடம் பணம், செல்போன் வழிப்பறி: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
பரமத்தி பகுதியில் லாரி டிரைவர்களிடம் பணம் மற்றும் செல்போன் வழிப்பறி செய்த வழக்கில் கைதான வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா மேல்காவனூர் கோரிமேடு பகுதியை சேர்ந்தவர் பவளராஜன் (வயது 23), லாரி டிரைவர். இவர் கடந்த 8.5.2016 அன்று பெங்களூருவில் இருந்து சரக்கு ஏற்றிக்கொண்டு திருவனந்தபுரம் நோக்கி லாரியில் சென்று கொண்டு இருந்தார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே காரைக்கால் பகுதியில் நள்ளிரவில் சாலையோரம் லாரியை நிறுத்தி இருந்தார்.
அப்போது அங்கு வந்த நாமக்கல் அருகே மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் (30) உள்ளிட்ட சிலர் கத்திமுனையில் மிரட்டி டிரைவர் பவளராஜனிடம் இருந்து ரூ.8 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்து சென்று விட்டனர்.
இதேபோல் திருச்சி மாவட்டம் கரிகாலி அருகே உள்ள உத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (30). லாரி டிரைவர். இவர் கடந்த 22.5.2016 அன்று பல்லடத்தில் இருந்து லாரியில் கோழிலோடு ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தார். பரமத்திவேலூர் அருகே உள்ள கோனூர் கந்தம்பாளையம் பகுதியில் லாரியை நிறுத்தி இருந்தபோது அங்கு வந்த மாதேஸ்வரன் உள்ளிட்ட சிலர் கத்திமுனையில் டிரைவர் சந்திரசேகரனிடம் இருந்து ரூ.4,750 மற்றும் 2 செல்போன்களை வழிப்பறி செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரன் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர். இந்த இரு வழக்கு விசாரணையும் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இருவழக்குகளிலும் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட மாதேஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவழகன் தீர்ப்பு கூறினார். 2 வழக்குகளிலும் 4 பிரிவுகளில் தனித்தனியாக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டாலும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாதேஸ்வரனை போலீசார் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.
இந்த வழக்குகளில் தொடர்புடைய 7 பேரும் ஏற்கனவே சிறை தண்டனை விதிக்கப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story