நெல்லையில் பரபரப்பு: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மர்மசாவு - விடுதி அறையில் பிணமாக கிடந்தார்
நெல்லையில் உள்ள தங்கும் விடுதி அறையில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள வேப்பங்காட்டை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 68). இவர் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்ஸ்பெக்டராக நீண்ட காலம் பணி புரிந்துள்ளார்.
இந்த நிலையில் உடன்குடி பகுதியில் உள்ள நிலம் தொடர்பாக விவரங்களை அறிய அவ்வப்போது அவர் சொந்த ஊருக்கு வந்து செல்வார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மராஜ் நெல்லைக்கு வந்தார். இங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். நேற்று காலை அவர் தங்கி இருந்த அறை நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்தபோது தர்மராஜ் வாயில் நுரை தள்ளிய நிலையில் படுக்கையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் விடுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள், அறைக்குள் சென்று தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தர்மராஜ் சாவுக்கான காரணங்கள் குறித்து அந்த அறையில் ஆய்வு செய்தனர்.
அங்கு நிலப்பிரச்சினை தொடர்பாக சார்-பதிவாளருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதமும், மகன் மற்றும் உறவினர்கள் செல்போன் எண்கள் குறிக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜ் சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story