எல்கர் பரிஷத் வழக்கை மும்பை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; புனே கோர்ட்டில் என்.ஐ.ஏ. மனு


எல்கர் பரிஷத் வழக்கை மும்பை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்; புனே கோர்ட்டில் என்.ஐ.ஏ. மனு
x
தினத்தந்தி 30 Jan 2020 11:44 PM GMT (Updated: 30 Jan 2020 11:44 PM GMT)

பீமா- கோரேகாவ் வன்முறை தொடர்பான எல்கர் பரிஷத் வழக்கை மும்பை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று அந்த வழக்கு விசாரணை நடந்து வரும் புனே கோர்ட்டில் தேசிய புலனாய்வு முகமை மனு செய்து உள்ளது.

மும்பை,

புனே மாவட்டம் பீமா- கோரேகாவில் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி போர் வெற்றி நினைவு தினத்தில் திடீரென சாதிய வன்முறை ஏற்பட்டது. இதற்கு முந்தைய நாள் நடந்த எல்கர் பரிஷத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதே காரணம் என்று கூறி, இது தொடர்பாக இடதுசாரி சிந்தனையாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு மாவோயிஸ்ட் உடன் தொடர்பு இருப்பதாக புனே போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கைதானவர்கள் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் சிவசேனா தலைமையில் அமைந்த கூட்டணி அரசு எல்கர் பரிஷத் வழக்கில் மறுவிசாரணை நடத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால் அதிரடி திருப்பமாக எல்கர் பரிஷத் வழக்கை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே சமீபத்தில் மத்திய அரசு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றிக்கொண்டது.

இதற்கு கூட்டணி அரசை நடத்தி வரும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும் எல்கர் பரிஷத் வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு மாற்றிக்கொண்டது தொடர்பாக மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தங்களுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை. அவ்வாறு அனுப்பும் பட்சத்தில், இது குறித்து அட்வகேட் ஜெனரலிடம் ஆலோசனை கேட்கப்படும் என்று மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்து இருந்தார்.

இதற்கு மத்தியில் மற்றொரு திருப்பமாக புனே சிறப்பு கோர்ட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், புனே சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கை மும்பையில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரப்பட்டு உள்ளது.

புனே கோர்ட்டில் இந்த மனு வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேசிய புனலாய்வு முகமை அதிகாரிகள் புனே வந்து மாநில போலீஸ் அதிகாரிகளை சந்தித்து வழக்கு தொடர்பான தகவல்களை கேட்டு அறிந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story