பேக்கரி கடை உரிமையாளர் கொலையில் ரவுடி உள்பட 3 பேர் சிக்கினர் - ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை


பேக்கரி கடை உரிமையாளர் கொலையில் ரவுடி உள்பட 3 பேர் சிக்கினர் - ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Jan 2020 11:50 PM GMT (Updated: 30 Jan 2020 11:50 PM GMT)

பாகூர் அருகே பேக்கரி கடை உரிமையாளர் கொலையில் ரவுடி உள்பட 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கினர். ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் ஏம்பலம் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் வஜ்ரவேல் (வயது 51). ஏம்பலத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தின் நிர்வாகியாக இருந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அதில் இருந்து விலகி வில்லியனூர், ஏம்பலம் ஆகிய இடங்களில் பேக்கரி கடை நடத்தி வந்தார்.

கடந்த 28-ந் தேதி இரவு செம்பியம்பாளையத்தில் உள்ள தனது பெரியம்மாவை பார்க்க சென்றார். அங்கு அவரிடம் ரூ.2 லட்சத்தை வாங்கி கொண்டு தனது காரில் வீட்டிற்கு திரும்பினார். வரும் வழியில் திடீரென மாயமானார். நீண்டநேரமாகியும் கணவர் வீட்டுக்கு வராததால் வஜ்ரவேலின் மனைவி அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது.

தனது கணவர் மாயமானது குறித்து புகார் அளித்ததன்பேரில் மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பாகூர் அருகே உள்ள குருவிகுளம் சமுதாய நலக்கூடம் அருகே கேட்பாரற்று நின்ற காரை போலீசார் சோதனையிட்ட போது காரின் பின்பக்க இருக்கையில் வஜ்ரவேல் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து வஜ்ரவேலின் குடும்பத்திற்கு தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். காரில் பேக்கரிக்கு தேவையான மூலப்பொருட்கள் அப்படியே இருந்தன. ஆனால் அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மாயமாகி இருந்தது. எனவே அவர் பணத்துக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள்.

பின்னர் மங்கலம் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதில், வஜ்ரவேல் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். மேலும் அவரது அக்காள் மருமகன் பிரகாஷ் என்பவர் அந்த பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டு கட்டியவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் தராமல் மோசடி செய்து விட்டு திடீரென அவர் தலைமறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் ஏலச்சீட்டு பணத்தை கேட்டு வஜ்ரவேலுக்கு சிலர் நெருக்கடி கொடுத்துள்ளனர். ஆனால் அவர் எனக்கும், பிரகாசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி பணம் தர மறுத்து விட்டதாக தெரிகிறது.

பிரகாசிடம் ஏலச்சீட்டு மூலம் ரூ.12 லட்சத்தை இழந்த ஒருவர் மட்டும் தொடர்ந்து வஜ்ரவேலிடம் பணத்தை கேட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் அந்த நபர் ரவுடிகளை வைத்து வஜ்ரவேலை மிரட்டியது தெரியவந்தது.

எனவே இந்த விவகாரத்தில் வஜ்ரவேல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் உண்டா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க வஜ்ரவேலின் உடல் கிடந்த இடத்தின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வஜ்ரவேல் கார் வந்து நின்ற உடன் அதில் இருந்து 7 பேர் இறங்கியது தெரியவந்தது. அதில் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த ரவுடி அய்யனார் போல் தோற்றம் காணப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் ரவுடி அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் முடிவில் தான் வஜ்ரவேலை கொலை செய்தது அய்யனார் மற்றும் அவரது கூட்டாளிகளா? அல்லது வேறு யாரும் அவரை கொலை செய்தனரா? அவர்கள் எங்கு வைத்து கொலை செய்தனர் என்பது போன்ற பல்வேறு விவரங்கள் தெரிய வரும்.

இதற்கிடையே வஜ்ரவேலின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின் நேற்று மாலை இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் நித்யானந்தா தலைமை பீடத்தில் இருந்து அவரது சீடர்கள் வந்து கலந்து கொண்டனர்.

Next Story