மேகமலை வனத்துறையினரை கண்டித்து வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - மற்றொரு இடத்தில் பசுமாடுகளுடன் சாலை மறியல்
மேகமலை வனத்துறையினரை கண்டித்து வனச்சரக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மற்றொரு இடத்தில் பசுமாடுகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடமலைக்குண்டு,
கடமலை-மயிலை ஒன்றியம் அரசரடி கிராமத்தை சேர்ந்தவர் வனம். இவருக்கு சொந்தமான தோட்டம் மேகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட 85 ஏக்கர் பகுதியில் உள்ளது. இவர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக கூறி அவரது தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஏலக்காய் செடிகளை மேகமலை வனத்துறையினர் வெட்டி அழித்தனர். அப்போது தடுக்க முயன்றபோது தன்னை வனத்துறையினர் தாக்கியதாக கூறி வனம், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் வனத்துறையினரை கண்டித்து, நேற்று விவசாய சங்கம் மற்றும் மலைக்கிராம மக்கள் இணைந்து மேகமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக மாவட்ட விவசாய சங்க தலைவர் கண்ணன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் மணவாளன் முன்னிலையில் இந்திராநகர், பொம்மராஜபுரம், அரசரடி உள்ளிட்ட மலைக்கிராம விவசாயிகள் கடமலைக்குண்டு கிராமத்தில் திரண்டனர்.
பின்னர் அவர்கள் வெட்டி அழிக்கப்பட்ட ஏலக்காய் செடிகளுடன் ஊர்வலமாக சென்று மேகமலை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகை போராட்டத்தை தொடர்ந்து மேகமலை வனச்சரக அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் விவசாயிகள் மேகமலை வனச்சரக அலுவலகம் முன்பு தேனி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட முயன்ற 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளை, போலீசார் கைது செய்து கடமலைக்குண்டுவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இதேபோல அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் உள்ளிட்ட மலைக்கிராமங்களில் அரசின் விலையில்லா மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்குவதற்கு லாரியில் பசுமாடுகள் ஏற்றி செல்லப்பட்டது. அப்போது மஞ்சனூத்து சோதனைச்சாவடியில் லாரியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும் மாவட்ட வனத்துறை அதிகாரிகளின் அனுமதி பெறாமல் மாடுகளை ஏற்றி செல்ல கூடாது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பசுமாடுகளுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இருப்பினும் மாடுகளை ஏற்றி செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பசுமாடுகளை சோதனைச்சாவடி அருகே கட்டி வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story