இளம்பெண்களை வைத்து விபசாரம்: அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது


இளம்பெண்களை வைத்து விபசாரம்: அ.தி.மு.க. பெண் பிரமுகர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2020 4:30 AM IST (Updated: 31 Jan 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதாக அ.தி.மு.க.வை சேர்ந்த கூட்டுறவு சங்க பெண் தலைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர், 

திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அருகே உமராபாத் வேப்பமர வீதியில் உள்ள ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடத்துவதாக ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மகளிர் போலீசார் மற்றும் உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த சில பெண்கள் தப்பியோடி விட்டதாக தெரிகிறது.

வீட்டில் கோபால் மனைவி பிரேமா (வயது 50), பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியை சேர்ந்த தேவராஜ் மனைவி லதா (35) மற்றும் 17 வயது பெண்ணும் போலீசில் சிக்கினர். 3 பேரையும் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிரேமா சில ஆண்டுகளாக வெளிமாநில இளம்பெண்களை அழைத்து வந்து விபசார தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அப்பெண்களுக்கு தினசரி சம்பளமாக ரூ.4 ஆயிரம் வழங்கியதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து பிரேமா மற்றும் லதா ஆகிய 2 பேரையும் கைது செய்து ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போலீசில் சிக்கிய 17 வயது இளம்பெண்ணுக்கு பிரேமா தினசரி ரூ.4 ஆயிரம் தருவதாக கூறி விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளார். கடந்த 10 நாட்களாக இளம்பெண்ணுக்கு பிரேமா பணம் கொடுக்கவில்லை. இதனால் அந்த இளம்பெண்ணின் தாயார் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பிரேமா, லதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட பிரேமா அ.தி.மு.க. பிரமுகர் ஆவார். தற்போது கட்சியில் மாவட்ட பிரதிநிதியாகவும், உமராபாத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவராகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விபசார வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story