தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை: உறவினரே ஜன்னலை உடைத்து நகையை திருடியது அம்பலம்


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை: உறவினரே ஜன்னலை உடைத்து நகையை திருடியது அம்பலம்
x
தினத்தந்தி 1 Feb 2020 4:00 AM IST (Updated: 1 Feb 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

திருவேற்காட்டில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டின் ஜன்னலை உடைத்து நகையை கொள்ளை அடித்த வழக்கில் அவரது உறவினர் கைது செய்யப்பட்டார். வீட்டிற்கு ஜன்னலை வைத்தவரே கொள்ளை அடித்தது அம்பலமானது.

பூந்தமல்லி,

திருவேற்காடு, மாதிராவேடு, ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 43). இவரது மனைவி மைதிலி. கணவன், மனைவி இருவரும் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு நாகராஜன் வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து பீரோவில் இருந்த 22 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.

இதுகுறித்து பூந்தமல்லி உதவி கமிஷனர் செம்பேடு பாபு, திருவேற்காடு இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அதில், இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த நாகராஜனின் உறவினரான நாராயணன்(40), என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் கொள்ளை சம்பவம் குறித்து விசாரித்தனர்.

விசாரணையில், வெல்டிங் வேலை செய்து வந்த நாராயணன் தொழிலில் வருமானம் இல்லாததால், பண கஷ்டத்தில் இருந்து வந்ததாகவும், அதனால் நாகராஜன் வீட்டில் கொள்ளை அடிக்க முடிவு செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, நாகராஜனும் அவரது மனைவியும் அவர்கள் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட நாராயணன் அங்கு வந்துள்ளார். அதன் பின்னர், கடப்பாரை மூலம் வீட்டின் பின் பகுதியில் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த நகையை கொள்ளையடித்து உள்ளார்.

மேலும் நாகராஜனின் வீட்டுக்கு ஜன்னலை வைத்து கொடுத்தவர் நாராயணன் என்பதால் அதை சுலபமாக உடைத்து கொள்ளை அடித்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் கொள்ளை அடித்த நகைகளை அடகு வைத்து, அந்த பணத்தில் திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த செல்லும்போது போலீசார் கைது செய்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 17 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Next Story