கொலை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது


கொலை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2020 10:15 PM GMT (Updated: 31 Jan 2020 8:14 PM GMT)

கொலை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது. கார் டிரைவர். 1996-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன், ஜான்சன், பாபு என்கிற குப்பன் ஆகியோர் சாகுல் அமீதின் காரில் சென்னை திருவொற்றியூர் வந்தனர். அங்கு அவர்கள் 3 பேரும் காரை ஒரு பகுதியில் நிறுத்தி விட்டு தனியாக சென்று வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அவர்கள் அதே காரில் திருவள்ளூரை அடுத்த பட்டரைப்பெரும்புதூர் வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் காரில் இருந்தபடி தாங்கள் வழிப்பறியில் ஈடுபட்டது குறித்து பேசி கொண்டிருந்தனர். தாங்கள் பேசி கொண்டிருந்ததை கேட்ட கார் டிரைவர் சாகுல் அமீது தங்களை போலீசில் மாட்டி விட்டு விடுவாரோ என்ற சந்தேகம் அடைந்தனர். அவர்கள் சாகுல் அமீதை கழுத்தை நெரித்து கொலை செய்து பட்டரைபெரும்புதூர் ஆற்றுப்பாலத்தில் வீசிவிட்டு தலைமறைவானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருவள்ளூர் தாலுகா போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் கோர்ட்டில் நடந்து வந்தது. 1998-ம் ஆண்டு திருவள்ளூர் கோர்ட்டு அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில் ஜாமீனில் வெளியில் இருந்த ஜான்சன் தலைமறைவாகிவிட்டார். கோர்ட்டு அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஜான்சன் தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்படி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் தனிப்படையினர் நேற்று அங்கு விரைந்தனர். பின்னர் அங்கு இருந்த ஜான்சனை சுற்றிவளைத்து தனிப்படை போலீசார் கைது செய்து திருவள்ளூர் அழைத்து வந்தனர்.

கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஜான்சன் தனது தந்தையின் சாவுக்கு வந்தபோது அவரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

Next Story