கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
கொரோனா வைரஸ் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
அன்னவாசல்,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைெபற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் கண் காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சீனாவில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிப்பதற்காக தமிழகத்தில் விமான நிலையங்களில் உள்ளே நுழையும் அனைத்து பயணிகளும் சுகாதாரத்துறை சார்பில் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வெளியே அனுப்பப்படுகின்றனர்.
சீனாவில் இருந்து இதுவரையில் 242 பேர் தமிழகத்திற்கு வந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் பொது சுகாதாரத்துறையின் நேரடி தொடர்பில் உள்ளனர். தமிழகத்தில் இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. மக்கள் அச்சம் அடைய தேவையில்லை. அதே வேளையில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவர் விமல் சீனாவில் இருந்து வந்தவர்தான். ஆனால் அவருக்கு கொேரானா வைரஸ் பாதிப்பு இல்லை. அவரை பரிசோதித்ததில் அவருக்கு இருந்தது சாதாரண சளி தொந்தரவு தான் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவருக்கும் கொேரானா வைரஸின் பாதிப்பு இல்லை. மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழகத்தில் உள்ள ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை உள்பட அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் தனிமைபடுத்தபட்ட வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.
தேவையான மருந்து மாத்திரைகளும் இருப்பில் உள்ளன. கேரளாவில் ஒருவர் பாதிக்கப்பட்டு உள்ளதால் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற நோக்கோடு கேரள மருத்துவ உயர் அதிகரிகளோடு தமிழக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அது மட்டுமின்றி தமிழக, கேரளா எல்லைகளிலும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பற்றி முகநூல், வாட்ஸ் அப்பில் வரும் தவறான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். அதிகார பூர்வமான அரசு தரும் தகவல்களை மட்டும் மக்கள் தெரிந்து கொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை தினசரி பொதுமக்களுக்கு இது குறித்து எடுத்துரைத்து வருகின்றது. பொதுமக்கள் கை கழுவும் பழக்கத்தை ஏற் படுத்தி கொள்ள வேண்டும். அந்த பழக்கத்தை ஏற்படுத்தினால் தொற்று நோய் பரவுவதை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story