ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி மாணவனை கொலை செய்த கண்டக்டருக்கு வாழ்நாள் சிறை
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி மாணவனை கொலை செய்த கண்டக்டருக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி கரூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியை சேர்ந்த 13 வயதுடைய 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தான். அப்போது க.பரமத்தி விசுவநாதபுரி சலவைக்கல் தெருவை சேர்ந்த மினிபஸ் கண்டக்டரான பிரதீப் (வயது 21) வெளிநாட்டு சாக்லெட் வாங்கி தருவதாக அச்சிறுவனிடம் ஆசைவார்த்தை கூறினார்.
இதனை நம்பி அந்த சிறுவனும் உடன் சென்றான். பின்னர் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சிறுவனை அழைத்து சென்ற பிரதீப், வலுக்கட்டாயமாக ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் தாம் மாட்டிக்கொள்வோமோ? என அஞ்சிய பிரதீப், துணியால் அச்சிறுவனின் வாய், மூக்கினை அழுத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
பள்ளிக்கு சென்றுவிட்டு வெகுநேரம் ஆகியும் சிறுவன் வராததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிபார்த்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நகர் வாய்க்கால் அருகே உள்ள சீத்தைக்காட்டில் அச்சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து அச்சிறுவனின் தாய், க.பரமத்தி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டம் (போக்சோ) உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரதீப்பை கைது செய்தனர்.
இந்த கொலை தொடர்பாக கரூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்ததால், நேற்று நீதிபதி சசிகலா தீர்ப்பு வழங்கினார். அதில், பிரதீப்புக்கு ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்திய குற்றத்திற்கு வாழ்நாள் சிறை தண்டனையுடன், ரூ.1,000 அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனையும் வழங்கப்படுகிறது.
மேலும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையுடன் ரூ.1,000 அபராதமும், கட்டதவறினால் மேலும் ஒரு மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். மேலும் இறந்து போன சிறுவன் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்பதால் அதிகபட்ச தண்டனையான வாழ்நாள் சிறை தண்டனையை பிரதீப் அனுபவிப்பார் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கரூர் கோர்ட்டில் இருந்து பிரதீப்பை போலீசார் வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story