குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி கணவன், மனைவி ரூ.3 லட்சம் மோசடி 2 பேர் கைது


குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி கணவன், மனைவி ரூ.3 லட்சம் மோசடி 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2020 4:45 AM IST (Updated: 1 Feb 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

அயனாவரத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை அயனாவரம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கையா (வயது 53). இவரது மனைவி அந்தோணியம்மாள் (50). தம்பதிகளான இவர்களிடம் கடந்த 2017-ம் ஆண்டு அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த பாபு (56) மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடு வாங்கி தருவதாக கூறி அந்தோணியம்மாளிடம் ரூ.3 லட்சம் வாங்கியுள்ளனர். அதன் பின்னர், 6 மாதம் கழித்து வீடு ஒதுக்கீடு ஆணை மற்றும் வீட்டிற்கான சாவி ஆகியவற்றை அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. மேலும், அவர்கள் அந்தோணியம்மாளிடம் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் திறப்பு விழா நடத்திய பின்பு வீட்டிற்குள் செல்லலாம் என்றும் கூறியுள்ளனர். இந்தநிலையில், சில மாதங்கள் கடந்த நிலையில் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்தோணியம்மாள், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் சென்று பாபு கொடுத்த வீட்டிற்கான ஆணை மற்றும் பத்திரங்களை காண்பித்து தனக்கு ஒதுக்கப்பட்ட வீடு எங்கு உள்ளது என்று கேட்டுள்ளார்.

அதற்கு அதிகாரிகள் இது போலியான வீடு ஒதுக்கீடு ஆணை என்றும், இதற்கும் குடிசை மாற்று வாரியத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்தோணியம்மாள் பாபுவிடம் தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.

அப்போது அவருக்கு பாபு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்தோணியம்மாள் அயனாவரம் போலீசில் புகார் செய்தார். உடனே இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து பாபுவை பிடித்து விசாரணை செய்ததில், பாபுவும் அவரது கூட்டாளியான அன்னனூரை சேர்ந்த பிரபாகரன் (34), இருவரும் சேர்ந்து அவர்களிடம் ரூ.3 லட்சம் வாங்கியதும், பின்னர் முத்திரைதாள் மூலம் போலியான ஆணையை தயார் செய்து கொடுத்ததையும் ஒத்துக்கொண்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவரும் மேலும் சிலருடன் சேர்ந்து ஈக்காட்டுதாங்கள் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை வசூலித்து கோடி கணக்கான பணம் ஏமாற்றியுள்ளதாக ஈக்காடுத்தாங்கல் போலீஸ் மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய பாபுவின் மனைவி லட்சுமி, அசோக், வெங்கடேசன் மற்றும் ஜெகதீசன் ஆகிய 4 பேரை அயனாவரம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story