மாவட்டத்தில் 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.1,000 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிப்பு


மாவட்டத்தில் 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் - ரூ.1,000 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 1 Feb 2020 4:00 AM IST (Updated: 1 Feb 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் 3 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். இதனால் ரூ.1,000 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம், 

20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும், சிறப்பு ஊதியத்தை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வங்கிகள் இணைப்பை கைவிட வேண்டும், வராக்கடனை வசூல் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர். அதன்படி நேற்று வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் முதல்நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளில் பணியாற்றும் 3 ஆயிரம் ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான வங்கிகளில் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலம் மாநகரில் உள்ள கோட்டை, டவுன், செவ்வாய்பேட்டை, அழகாபுரம், சூரமங்கலம் பகுதிகளில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. சில வங்கிகள் மூடப்பட்டு இருந்ததை காணமுடிந்தது.

சேலம் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் தலைமை தாங்கினார். இதில், தொழிற்சங்க நிர்வாகிகள் சம்பத், குணாளன், மணிகண்டன், உமாநாத், தீனதயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு வங்கிகளின் அதிகாரிகள், ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்களை எழுப்பினர். வேலைநிறுத்த போராட்டம் இன்றும் நடைபெற உள்ளது.

இது குறித்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்துவிட்டது. அதன்பிறகு பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் எட்டப்படவில்லை. 20 சதவீத ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் அதிக லாபத்தை சம்பாதித்து கொடுக்கும் வங்கி ஊழியர்களுக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை ஊதியத்தை உயர்த்தி கொடுக்க அரசு மறுக்கிறது. இதுபற்றி கேட்டால், ஊதிய உயர்வு வழங்க நிதி ஆதாரம் இல்லை என்று கூறுகிறார்கள். வங்கிகளின் மூலம் கடந்த மார்ச் 2019-ம் ஆண்டு கணக்குப்படி ரூ.1½ லட்சம் கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த லாப தொகையை வராக்கடனில் தள்ளுபடி செய்து ந‌‌ஷ்ட கணக்கை அரசு காட்டுகிறது.

அதாவது, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.2.16 லட்சம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.65 ஆயிரம் கோடி ந‌‌ஷ்ட கணக்கை காட்டியுள்ளனர். வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கினால் ரூ.11,200 கோடி மட்டுமே செலவாகும். ஆனால், தொழில் அதிபர்களின் வராக்கடனை லட்சக்கணக்கான கோடியில் தள்ளுபடி செய்வதில் தான், குறியாக இருக்கின்றனர். எங்களின் வேலைநிறுத்தம் காரணமாக பணம், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வர்த்தக பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story