புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ரூ.200 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்


புதுச்சேரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - ரூ.200 கோடி பண பரிவர்த்தனை முடக்கம்
x
தினத்தந்தி 1 Feb 2020 5:06 AM IST (Updated: 1 Feb 2020 5:06 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ரூ.200 கோடி அளவிலான பண பரிவர்த்தனை முடங்கியது.

புதுச்சேரி, 

தேசிய மயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய 9 சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி நாடு முழுவதும் நேற்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். புதுவையிலும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

இது தெரியாமல் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். அதேநேரத்தில் ஏ.டி.எம். மையங்கள் வழக்கம்போல் இயங்கின.

இந்தநிலையில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் அரசு பொது மருத்துவமனை அருகே உள்ள யூகோ வங்கியின் தலைமை அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்க தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் முனுசாமி, சுந்தரவரதன், முரளிதரன், ரங்கராஜன், பிரேம்ராஜ், விஸ்வநாதன், தயாளன், சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில் 200க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

2-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர உள்ளனர். வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான வங்கிகள் திறந்து இருந்தபோதும் அங்கு பணியாளர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்தன. இதனால் ஏ.டி.எம். மற்றும் தானியங்கி வங்கி சேவை மையங்களில் வாடிக்கையாளர்களின் அதிக அளவில் காணப்பட்டது/.

வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்து சங்க தலைவர் திருமாறன் கூறும்போது, 9 சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இன்றும் (சனிக் கிழமை) இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது.

நாடு முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றனர். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை 300 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 3 ஆயிரம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளோம். இதனால் ரூ.200 கோடி அளவுக்கு பணபரிவர்த்தனை முடங்கியது என்றார்.

Next Story