இளம்ஜோடி மீது கொடூர தாக்குதல்: வலைத்தளத்தில் பரவிய வீடியோ; 4 பேர் கைது


இளம்ஜோடி மீது கொடூர தாக்குதல்: வலைத்தளத்தில் பரவிய வீடியோ; 4 பேர் கைது
x
தினத்தந்தி 1 Feb 2020 5:11 AM IST (Updated: 1 Feb 2020 5:11 AM IST)
t-max-icont-min-icon

ஜல்னாவில் இளம்ஜோடி கொடூரமாக தாக்கப்பட்ட காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியது. இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

புனே,

ஜல்னா மாவட்டத்தில் உள்ள கோண்டேகாவ் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்ஜோடியை 4 பேர் கும்பல் சேர்ந்து கொடூரமான முறையில் தாக்கி உள்ளனர். அங்கிருந்தவர்கள் யாரும் அவர்களை மீட்க முன்வரவில்லை. மாறாக அவர்கள் தாக்கப்படுவதை தங்களது செல்போனில் படம் பிடித்து உள்ளனர்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இது தொடர்பாக மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்தனர். எதற்காக அவர்கள் இளம்ஜோடியை இப்படி கண்மூடித்தனமாக தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கைதானவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மந்திரி அனில் தேஷ்முக் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்னாவில் நடந்த இந்த சம்பவம் கண்டனத்திற்குரியது. அந்த வீடியோ பரப்பப்படுவதை தடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

‘‘இளம்ஜோடி தாக்கப்படும் வீடியோவை பரப்பாதீர்கள்’’ சுப்ரியா சுலே எம்.பி. வேண்டுகோள்

ஜல்னாவில் 4 பேர் கும்பலால் ஒரு இளம்ஜோடி கொடூரமான முறையில் தாக்கப்படும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பரப்பாதீர்கள் என தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே வேண்டுகோள் விடுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறிய தாவது:-

இந்த வீடியோவை நீங்கள் பரப்பினால் இந்த தாக்குதல் சம்பவத்தை நீங்கள் கண்டிக்காமல் அதை மறைமுகமாக ஆதரிக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

இளம்பெண்ணின் அந்தரங்கம் பாதுகாக்கப்பட வேண்டும். அது அவரது உரிமை. எனவே ஒவ்வொருவரும் அவரை தங்களது சகோதரியாக கருதி மதிக்க வேண்டும். மராட்டியத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் அந்த வீடியோவை தயவு செய்து பரப்பாதீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story