நெய்வேலியில் என்.எல்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், நெய்வேலி என்.எல்.சி. பொது மருத்துவமனையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம் என்றும் கூறி, வந்த மிரட்டல் கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெய்வேலி,
நெய்வேலி 6-வது வட்டத்தில் என்.எல்.சி. நிறுவன கட்டுப்பாட்டின் கீழ் பொது மருத்துவமனை அமைந்துள்ளது. என்.எல்.சி.யில் பணிபுரிபவர்கள் மற்றும் சுற்றிலும் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனை மூலம் பயனடைந்து வருகின்றனர்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனையும் இந்த மருத்துவமனையில் தான் நடைபெறும். இதில் தொழிலாளர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அவர்களை அங்கிருந்து விடுவித்து, மாற்று பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இந்த நிலையில், தற்போது 31-ந்தேதி(அதாவது நேற்று), இன்று(சனிக்கிழமை), நாளை மறுநாள்(திங்கட்கிழமை), 4-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) ஆகிய நாட்களில் தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் தலைமை மருத்துவர் (பொறுப்பு) பாக்கியமேரி ஜெபம் மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது, மருத்துவமனைக்கு வந்திருந்த கடிதங்களை அவர் படித்து பார்த்து கொண்டிருந்தார். அதில் ஒரு கடிதத்தில், என்.எல்.சி. மருத்துவமனையில் நடைபெற உள்ள தொழிலாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடத்தக்கூடாது, மீறி நடத்தினால் வெடிகுண்டு தாக்குதல் நடத்துவோம். எங்களுக்கு பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதி தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. நாங்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தயாராக இருக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடிதத்தை படித்ததும், அதிர்ந்து போன அவர், உடனடியாக மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி ஜெயமோகன் தாசிடம் தெரிவித்தார். பின்னர் அவர் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் இது குறித்து உடனடியாக புகார் தெரிவித்து, கடிதத்தையும் ஒப்படைத்தார்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களை பார்க்க வரும் உறவினர்களை தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல போலீசார் அனுமதித்தனர். ஆம்புலன்ஸ் தவிர மற்ற எந்த வாகனங்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதற்கிடையில் கடலூரில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில், போலீசார் மேகநாதன், ராஜராஜன், மோப்ப நாய் பயிற்சியாளர் சூரியராஜா ஆகியோர் மோப்ப நாய் சிம்பாவுடன் மருத்துவமனைக்கு விரைந்தனர். இவர்கள் நோயாளிகள் அதிகம் பேர் வந்து செல்லும் பகுதி, என்.எல்.சி. சுரங்க தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் பகுதி என்று அனைத்து இடங்களிலும் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது உறைவிட மருத்துவ அதிகாரி ஜெயமோகன் தாஸ், மனித வளத்துறை அதிகாரிகள் வரதன், சோமர்வெல் என்.எல்.சி. பாதுகாப்பு படை அதிகாரிகள் பாலாஜி, உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். சோதனை முடிவில் மருத்துவமனை வளாக பகுதியில் வெடிகுண்டுகள் இல்லை என்பது தெரியவந்தது.
குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்களில் பயங்கரவாதியான அப்துல் சமீமின் தலைவன் கடலூரை சேர்ந்த காஜா மொய்தீன் என்பது தெரியவந்தது. இதையடுத்து காஜாமொய்தீன் கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், நெய்வேலியில் வசித்து வந்த வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர்.
இத்தகைய சூழ்நிலையில் தற்போது பயங்கரவாத அமைப்பை தொடர்பு படுத்தி வந்த மிரட்டல் கடிதம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எங்கிருந்து வந்தது, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நெய்வேலி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே என்.எல்.சி. தொழிலாளர்களுக்கு நேற்று மற்றும் இன்று நடைபெறுவதாக இருந்த மருத்துவ பரிசோதனை முகாம் ஒத்திவைக்கப்படுவதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story