ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 2-வது நாளாக வங்கிகள் மூடப்பட்டன வாடிக்கையாளர்கள் அவதி


ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 2-வது நாளாக வங்கிகள் மூடப்பட்டன வாடிக்கையாளர்கள் அவதி
x
தினத்தந்தி 1 Feb 2020 11:00 PM GMT (Updated: 1 Feb 2020 5:09 PM GMT)

மயிலாடுதுறை பகுதியில் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 2-வது நாளாக வங்கிகள் மூடப்பட்டன. இதனால் வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டனர்.

மயிலாடுதுறை,

அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு வங்கி சங்கங்கள் நேற்று முன்தினம் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் தொடங்கியது. 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி மயிலாடுதுறை மற்றும் சுற்று பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் அனைத்தும் நேற்று அதிகாரிகள், ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் இழுத்து மூடப்பட்டன. 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

செயல்படாத ஏ.டி.எம். மையங்கள்

இந்த வேலை நிறுத்தத்தால் வங்கியில் காசோலை பரிவர்த்தனை, பண பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மூடங்கின. வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுத்து வந்தனர். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் பணம் தீர்ந்துபோன ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை என்பதால் பணம் இல்லாத ஏ.டி.எம். எந்திரங்கள் இன்றும் செயல்படாது. பணம் டெப்பாசிட் செய்யப்படும் எந்திரங்களிலும் பணம் நிரம்பி விட்டதால் செயல்படாமல் உள்ளது.

மேலும் அரசு ஊழியர்கள், மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வழங்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் பணம் கிடைக்காமல் அவதிக்குள்ளாயினர். நாளை திங்கட்கிழமை வங்கிகள் செயல்பட தொடங்கிய பின்புதான் வங்கி சேவைகள், ஏ.டி.எம். சேவைகள் ஆகியன சீரடைய வாய்ப்புள்ளது.

Next Story