லாரி மோதி நகராட்சி பெண் ஊழியர் பலி


லாரி மோதி நகராட்சி பெண் ஊழியர் பலி
x
தினத்தந்தி 2 Feb 2020 3:15 AM IST (Updated: 2 Feb 2020 2:34 AM IST)
t-max-icont-min-icon

தக்கலையில், தோழியுடன் ஸ்கூட்டரில் சென்ற போது லாரி மோதி நகராட்சி பெண் ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

பத்மநாபபுரம், 

தக்கலை அருகே வெட்டிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரதிகுமாரி (வயது 43). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரதிகுமாரி பத்மநாபபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்பு தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடன் ராமன்பரம்பு பகுதியை சேர்ந்த சகுந்தலா (47) என்பவரும் பணிபுரிந்து வந்தார். இவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்தனர்.

நேற்று காலையில் தோழிகள் இருவரும் ஸ்கூட்டரில் தக்கலையில் இருந்து குமாரபுரம் நோக்கி புறப்பட்டனர். ஸ்கூட்டரை சகுந்தலா ஓட்டி செல்ல, ரதிகுமாரி பின்னால் அமர்ந்திருந்தார்.

தக்கலை பழைய பஸ் நிலையம் பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் தோழிகள் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் விரைந்து வந்து இருவரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள், ரதிகுமாரி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். சகுந்தலா மேல் சிகிச்சைக்காக அழகியமண்டபத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story