வாலிபர் சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய தம்பி கைது


வாலிபர் சாவில் திடீர் திருப்பம்: கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய தம்பி கைது
x
தினத்தந்தி 2 Feb 2020 4:30 AM IST (Updated: 2 Feb 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

குமராட்சி அருகே வாலிபர் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போன்று நாடகமாடிய தம்பியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

காட்டுமன்னார்கோவில்,

குமராட்சி அருகே உள்ள மா.புளியங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன்கள் குணசேகரன் (வயது 32), அன்பரசன்(29). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த குணசேகரன், கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார். கடந்த 28-ந்தேதி வீட்டில் இருந்த குணசேகரன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குணசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

தம்பியை பிடித்து விசாரணை

இந்த நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில், குணசேகரன் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். சந்தேகத்தின் பேரில் அவரது தம்பி அன்பரசனிடம் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்தார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், தனது அண்ணனை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக போலீசில், அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

கடனை தராததால் கொன்றேன்

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது அண்ணன் குணசேகரன் வெளிநாடு செல்வதற்காக, 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கொடுத்தேன். இந்த கடனை இதுவரைக்கும் அடைக்கவில்லை. தற்போது சொந்த ஊர் திரும்பிய அண்ணனிடம், பணத்தை கேட்டும், அவர் கொடுக்கவில்லை. மேலும் என்னிடமும் பேசாமல் இருந்தார். இதனால் எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி எனது தாய் வீரம்மாள் உறவினர் இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்ள சென்றுவிட்டார். வீட்டில் தூங்கி கொண்டிருந்த அண்ணனை, பெல்டால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின்னர் எதுவும் தெரியாதது போன்று இருந்தேன். இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் சிக்கி கொண்டேன் என்று தெரிவித்தார்.

இதையடுத்து அன் பரசனை கைது செய்த போலீசார், அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தம்பியே அண்ணனை கொலை செய்து விட்டு ஒன்றும் தெரியாதது போன்று நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story