படிப்பில் கலக்கும் நரிக்குறவர் காலனி மாணவ -மாணவிகள் ஊசி, பாசி விற்க மாட்டோம், டாக்டர் ஆவோம் என்கின்றனர்


படிப்பில் கலக்கும் நரிக்குறவர் காலனி மாணவ -மாணவிகள் ஊசி, பாசி விற்க மாட்டோம், டாக்டர் ஆவோம் என்கின்றனர்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:45 PM GMT (Updated: 1 Feb 2020 10:03 PM GMT)

நரிக்குறவர் காலனியை சேர்ந்த மாணவ, மாணவிகள் படிப்பில் கலக்கி வருகின்றனர். அவர்கள் ஊசி, பாசி விற்கமாட்டோம், டாக்டர் ஆவோம் என்று கூறுகின்றனர்.

பொன்மலைப்பட்டி,

திருச்சி அருகே பொன்மலைப்பட்டியில் உள்ள டி.இ.எல்.சி. தொடக்கப்பள்ளியில் நரிக்குறவர் காலனியை சேர்ந்த 26 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு சினிமா நடிகர், நடிகைகளின் பெயர்கள் தான் உள்ளன. ஒரு மாணவனின் பெற்றோர் பெயர் ரஜினி-கவுதமி மற்றொரு மாணவனின் பெற்றோர் பெயர் கமல்- குஷ்பூ. வேலை விட்டால் சினிமா என்று இருந்துவிட்ட நரிக்குறவ மக்கள் இன்றும் தங்கள் குழந்தைகளுக்கு கார்த்திக், கவுதம் என்று பெயர் வைத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறார்கள். இவர்களில் ஒரு பெண் என்ஜினீயரிங் படித்துள்ளார்.

படித்தால் கிடைக்கும் மரியாதையை பார்த்து, பள்ளிகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளான அப்பகுதிக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளை அழைத்து வந்து வகுப்புகளில் பாடம் சொல்லி கொடுக்கிறார் ஆசிரியை சுகந்தி டெய்சி ராணி. தேவராயனேரி காலனியில் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் 100-க்கும் மேற்பட்டோர் மாணவ பருவத்தினர் ஆவார்கள். இவர்கள் ஆர்வத்தோடு படிக்க சென்றாலும், சில பள்ளிகளின் வகுப்பறைகளில் அவர்களை கடைசி இருக்கையில் அமர வைத்து விடுவதாக கூறப்படுகிறது. ஆனால் பொன்மலைப்பட்டி பள்ளியில் பெரும்பாலும் நரிக்குறவர் காலனி மாணவ, மாணவிகளே படிப்பதால் அனைவரும் சமமாக அமர்ந்து வகுப்பில் பாடம் படித்து வருகிறார்கள். இவர்கள் நன்றாக படிப்பதாக ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அனைவரும் உறவினர்கள் என்பதால் இங்கு நண்பர்களை விட அண்ணன் -தம்பி, அக்கா - தங்கை என்ற உறவுமுறை மாணவ, மாணவிகளே அதிகமாக உள்ளனர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

படிப்பில் கலக்கி வரும் நரிக்குறவர் காலனியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சமூகப் பார்வையிலும் வித்தியாசமாக இருக்கிறார்கள். சமீபத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று நரிக்குறவர் காலனி மாணவ-மாணவிகள் அதிக அளவில் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களை நெகிழ செய்தது. அதன்பிறகு மூலிகை செடிகள் வளர்த்து இயற்கையோடு வாழ்வோம் என்று நடத்திய நிகழ்ச்சி பெருமை சேர்த்தது. அப்பகுதி மாணவ-மாணவிகள் பள்ளி சீருடையுடன் புத்தக பை சுமந்து செல்வது, பள்ளிக்கூடம் போகாமல் தாய், தந்தையுடன் ஊசிமணி, பாசிமணி விற்க செல்லும் மற்ற நரிக்குறவ சிறுவர், சிறுமிகளையும் பாடம் கற்க பள்ளியை நோக்கி திரும்ப செய்துள்ளது.

டாக்டர், என்ஜினீயராக...

இதுவரை ‘சாமியோவ்’ என்று இவர்களிடம் இருந்து வெளிப்பட்ட குரல் விரைவில் மாறும் என்பது, அப்பகுதி மாணவ, மாணவிகளின் நடத்தையில் வெளிப்படுகிறது. மேலும் ஊசிமணி, பாசிமணி விற்காமல், டாக்டர், என்ஜினீயர் என்று பெருமையுடன் தங்களை மற்றவர்கள் அழைக்கும் காலம் வருமென்று சட்டை காலரை தூக்கிவிட்டு சபதம் போடுகிறார்கள் நவீன காலத்தை நோக்கி நடைபோடும் நரிக்குறவர் காலனி மாணவ, மாணவிகள்.

Next Story