அலகுமலையில் இன்று ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய காத்திருக்கும் காளைகள்


அலகுமலையில் இன்று ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் சீறிப்பாய காத்திருக்கும் காளைகள்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:39 PM GMT (Updated: 1 Feb 2020 10:39 PM GMT)

அலகுமலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. வாடிவாசலில் சீறிப்பாய காளைகள் காத்திருக்கின்றன. அதை அடக்க காளையர்கள் தயாராக உள்ளனர்.

பொங்கலூர், 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்காக கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பெருந்தொழுவு செல்லும் ரோட்டில் அலகுமலை முருகன் கோவிலின் மேற்கு புறத்தில் உள்ள இடத்தில் விழா நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் தலைமை தாங்குகிறார். பொங்கலூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சிவாச்சலம் வரவேற்று பேசுகிறார். கோவை நாகராஜன் எம்.பி., கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

போட்டியை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் தொடங்கிவைக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் வழிநடத்துகிறார். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு சபாநாயகர் ப.தனபால் பரிசுகளை வழங்கி பாராட்டி பேசுகிறார். ரூ.35 லட்சம் மதிப்பில் பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன.

போட்டிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 400 அடி நீளத்துக்கு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இருபுறமும் பிரமாண்ட கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 20 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளன.

கேலரியில் சிறப்பு விருந்தினர்கள், பத்திரிகையாளர்கள் அமரும் வகையில் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து மற்ற பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வெளியே வரும் பகுதியான வாடிவாசல் மற்றும் மேடை தயார் நிலையில் உள்ளது.

இந்த பகுதியில் இருந்து தான் அமைச்சர் உடுமலை கே.ராதாகிரு‌‌ஷ்ணன் போட்டியை தொடங்கிவைக்க உள்ளார். காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் காயம் அடையாமல் இருக்க தேங்காய் நார்(தேங்காய் மஞ்சு) கொட்டப்பட்டுள்ளது. போட்டி இன்று தொடங்குவதால் மைதானத்தில் நடந்த இறுதிக்கட்ட ஏற்பாடுகளை மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார், ஆர்.டி.ஓ. கவிதா ஆகியோர் நேற்று மாலை நேரில் ஆய்வு செய்தனர்.

போட்டிக்கான ஏற்பாடுகளை அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் தலைவர் லீடர் டேப் பழனிசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் சுப்பிரமணியம், துணைச்செயலாளர் அர்ஜூனன், ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம், இணை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், துணைத்தலைவர் மூர்த்தி, இணை செயலாளர் செந்தில்குமார், வரவேற்புக்குழு தலைவர் லோகநாதன், ஆலோசகர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Next Story