வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் ரூ.170 கோடி பரிவர்த்தனை பாதிப்பு


வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்: மாவட்டத்தில் ரூ.170 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 3:30 AM IST (Updated: 2 Feb 2020 9:40 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மாவட்டத்தில் சுமார் ரூ.170 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

தேனி,

விலைவாசி உயர்வுக்கேற்ப புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று முன்தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். 2-வது நாளாக நேற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 96 கிளைகள் உள்ளன. இங்கு 450 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் 440 பேர் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் வங்கி பணிகள் 2-வது நாளாக முடங்கின. வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

வேலை நிறுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.130 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. நேற்றும் வியாபாரிகள் தங்களின் வியாபார நிறுவனங்களில் வர்த்தகம் செய்த பணத்தை வங்கியில் செலுத்த முடியாமல் பாதிக்கப்பட்டனர். தொழில் நிறுவனங்களில் வங்கிகள் மூலம் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் பணியும் பாதிக்கப்பட்டது. 2-வது நாளாக நேற்று சுமார் ரூ.170 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

அந்த வகையில் 2 நாட்களில் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.300 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் அடகு வைத்த நகைகளை திருப்ப முடியாமலும், வட்டி கட்ட முடியாமலும் பாதிக்கப்பட்டனர்.

Next Story