பணம் கேட்டு மிரட்டி நிதி நிறுவன அதிபர் காரில் கடத்தல் 2 பேர் கைது


பணம் கேட்டு மிரட்டி நிதி நிறுவன அதிபர் காரில் கடத்தல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 1:04 AM IST)
t-max-icont-min-icon

நிதி நிறுவன அதிபரை காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆவடி,

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர், அம்பத்தூரைச் சேர்ந்த சைமன் என்பவருடன் இணைந்து ‘நியூ லைப்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். தங்களிடம் பணம் முதலீடு செய்தால் குறிப்பிட்ட மாதங்களில் இரட்டிப்பாக்கி தருவதாக கூறினர். அதை நம்பி இவர்களிடம் பலர் பணம் முதலீடு செய்தனர்.

இதற்கிடையில் இவர்களிடம் பணம் முதலீடு செய்தவர்கள், தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். கடந்த 31-ந் தேதி மாலை, இவரிடம் கமிஷன் அடிப்படையில் பணிபுரிந்து வந்த மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் ஜோதி நகரைச் சேர்ந்த ராஜேஷ் (21) மற்றும் நந்தம்பாக்கம் லூட்ஸ் காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ் (23) ஆகியோர் சரவணனை ஆவடிக்கு வரவழைத்தனர்.

அதன்படி ஆவடிக்கு தனது காரில் சென்ற சரவணன், அங்கிருந்து ராஜேஷ், வெங்கடேஷ் இருவரையும் ஏற்றிக்கொண்டு கோவில்பதாகை பூம்பொழில் நகர் சென்றார். அங்கு காரை நிறுத்திவிட்டு 3 பேரும் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த 4 பேர் திடீரென ராஜேஷ், வெங்கடேஷ் இருவரையும் காரில் இருந்து இறக்கிவிட்டு, காருடன் சரவணனை கடத்திச்சென்றனர். செல்லும் வழியில் அவரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.

இதற்கிடையில் ராஜேஷ், வெங்கடேஷ் இருவரும் சரவணன் மனைவிக்கு போன் செய்து தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவர் கடத்தப்பட்டது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜ்மணி, சரவணனின் செல்போனில் தொடர்புகொண்டார். போனை எடுத்த மர்மநபர், இன்ஸ்பெக்டர் பேசுவதை அறிந்ததும் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டார். போலீசார் தேடுவதை அறிந்த மர்மநபர்கள், நேற்று முன்தினம் மாலை சென்னை ராயபுரம் பகுதியில் சரவணனை இறக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சரவணனை காரில் கடத்திச்செல்ல, மர்மநபர்களுக்கு உதவியதாக ராஜேஷ் மற்றும் வெங்கடேஷ் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த கடத்தல் வழக் கில் தலைமறைவாக உள்ள ராமு மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story