சென்னையில் பனம்பால் இறக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம் என்.ஆர்.தனபாலன், வி.ஜி.சந்தோசம் பங்கேற்பு


சென்னையில் பனம்பால் இறக்க அனுமதிக்க கோரி ஆர்ப்பாட்டம் என்.ஆர்.தனபாலன், வி.ஜி.சந்தோசம் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 7:42 PM GMT)

பனம்பால் இறக்க அனுமதிக்க கோரி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் என்.ஆர்.தனபாலன், வி.ஜி.சந்தோசம் பங்கேற்றனர்.

சென்னை,

பனம்பால் இறக்க அனுமதிக்க கோரி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அ.ஹரிநாடார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு கள் இயக்கம் தலைவர் செ.நல்லசாமி, நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கத் தலைவர் த.பத்மநாபன், தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து ரமேஷ், பொதுச்செயலாளர் வி.எல்.சி.ரவி, தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பாளர் வி.தர்மராஜ், கொங்குநாடு சான்றோர் குல நாடார் முன்னேற்ற சங்க தலைவர் பி.உதயா வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தமிழக அரசு பனம்பால் இறக்க அனுமதி வழங்கவேண்டும் என கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது அ.ஹரிநாடார் கூறியதாவது:-

பனை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பனம்பால் இறக்க அனுமதி வழங்கவேண்டும். பனைத் தொழிலை விரிவு படுத்தும் விதமாக பனை ஏறும் எந்திரம் இலவசமாக வழங்கவேண்டும். பனை ஏறும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தால் ரூ.25 லட்சம் நிவாரணம் அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் மீன்வளத்துறை இருப்பது போல் பனை தொழிலை காக்க தனித்துறை அமைக்க வேண்டும். மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் அரசு உதவித்தொகை போல, பனை சார்ந்த தொழில் நடைபெறா காலத்தில் தமிழக அரசு உதவித்தொகை வழங்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கு.ராமராஜ், வணிகர் கூட்டமைப்பு பொது செயலாளர் கவுரவ பாண்டியன், மாநில அமைப்பாளர் வீரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story