வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு


வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 2 Feb 2020 11:00 PM GMT (Updated: 2 Feb 2020 7:57 PM GMT)

வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது கண்டெடுக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள், தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மெலட்டூர்,

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள தேவராயன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிடங்காநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது62). இவர் அம்மாப்பேட்டை ஒன்றிய தி.மு.க. பொருளாளர் ஆவார். அந்த பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவருடைய நிலத்தில் வீடு கட்டுவதற்காக கட்டிட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் மாலை பள்ளம் தோண்டினர். அப்போது நிலத்துக்கு அடியில் உலோக பொருட்கள் தட்டுப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் கவனமாக தோண்டியபோது 2 சாமி சிலைகள் மண்ணில் புதைந்திருப்பது தெரியவந்தது. அவற்றை தொழிலாளர்கள் வெளியே எடுத்து பாதுகாப்பாக வைத்தனர்.

ஐம்பொன்

அதில் ஒன்று 3 அடி உயரம் உள்ள விஷ்ணு சிலையாகும். மற்றொன்று 2 அடி உயரம் உள்ள அம்மன் சிலை ஆகும். இதுகுறித்து பாபநாசம் தாசில்தார் அலுவலகத்துக்கு ராமலிங்கம் தகவல் தெரிவித்தார்.

தகவலின்பேரில் பாபநாசம் தாசில்தார் கண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று சிலைகளை பார்வையிட்டனர். இதில் சிலைகள் இரண்டும் ஐம்பொன்னால் ஆனவை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிலைகள் தாசில்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த சிலைகள் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. சிலைகள் எந்த காலத்தை சேர்ந்தவை? ஏதேனும் கோவிலுக்குரிய சிலைகளா? என்பது பற்றி அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story