கோலாரில் பரபரப்பு சம்பவம்: ஆஞ்சநேயர் கோவில் கருவறைக்குள் புகுந்த முஸ்லிம் வாலிபர் - போலீசார் கைது செய்து விசாரணை


கோலாரில் பரபரப்பு சம்பவம்: ஆஞ்சநேயர் கோவில் கருவறைக்குள் புகுந்த முஸ்லிம் வாலிபர் - போலீசார் கைது செய்து விசாரணை
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

கோலாரில் ஆஞ்சநேயர் கோவிலின் கருவறைக்குள் புகுந்த முஸ்லிம் வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்,

கோலார் டவுன் குருபரபேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவில் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம், ஆஞ்சநேயர் கோவிலுக்குள் முஸ்லிம் வாலிபர் ஒருவர் புகுந்தார். கண்இமைக்கும் நேரத்தில் கோவிலின் கருவறைக்குள் புகுந்த அந்த நபர், ஆஞ்சநேயர் சாமி சிலை முன்பு அமர்ந்து கொண்டார். மேலும் அவர் ஆஞ்சநேயர் சிலை முன்பு படுத்து உருண்டார்.

அப்போது அந்த நபர், ஆஞ்சநேயர் சிலையை பார்த்து ‘என்னை தியாகம் செய்கிறேன், எடுத்துக்கொள்’ என்று கத்தினார். திடீரென்று கோவிலின் கருவறைக்குள் புகுந்து மனநலம் பாதிக்கப்பட்டவரை போல அந்த நபர் நடந்து கொண்டதால் கோவிலில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோவில் பூசாரி மற்றும் அங்கிருந்தவர்கள் அந்த நபரை வெளியே வரும்படி கூறியும், அவர் வெளியே வர மறுத்து அங்கேயே படுத்துக் கொண்டார்.

இதுகுறித்து கோலார் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், கோவிலின் கருவறைக்குள் புகுந்த வாலிபரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து கொண்டு சென்றனர். இதுகுறித்து அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், அவர் கோலாா் டவுன் பகுதியை சேர்ந்த சிக்கந்தர் பேக் (வயது 27) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஞ்சநேயர் கோவிலின் கருவறைக்குள் முஸ்லிம் வாலிபர் ஒருவர் புகுந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஆஞ்சநேயர் கோவிலில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story