தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கையெழுத்து இயக்கம் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை


தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கையெழுத்து இயக்கம் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரிக்கை
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 3:16 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லையில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினார்கள்.

நெல்லை,

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவற்றை எதிர்த்தும், இதை ரத்து செய்யவேண்டும் என்றும் இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி கட்சியினரும், முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர், த.மு.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவேண்டும் என்று பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்.

நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் நடந்த இந்த கையெழுத்து இயக்கத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டையில்...

பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலய வளாகத்தில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதில் பலர் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை மார்க்கெட் அருகில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். த.மு.மு.க. மாவட்ட செயலாளர் அலிப் பிலால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை டவுன் சந்திப்பிள்ளையார் கோவில் அருகில் தி.மு.க. மாநகர செயலாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெல்லை டவுன் காந்திசிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையிலும், நெல்லை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பாஸ்கரன் தலைமையிலும், மேலப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீரான்மைதீன் தலைமையிலும், தச்சநல்லூரில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் காசி தலைமையிலும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Next Story