டாஸ்மாக் கடை திறக்க கடும் எதிர்ப்பு: மளிகை கடை முன்பு பெண்கள் தர்ணா


டாஸ்மாக் கடை திறக்க கடும் எதிர்ப்பு: மளிகை கடை முன்பு பெண்கள் தர்ணா
x
தினத்தந்தி 3 Feb 2020 4:00 AM IST (Updated: 3 Feb 2020 9:55 AM IST)
t-max-icont-min-icon

அவினாசி அருகே டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கொடுக்க முயன்றவரை கண்டித்து, அவருடைய மளிகை கடை முன்பு பெண்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவினாசி,

அவினாசி அருகே தெக்கலூரில் டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முயன்று வருகிறது. இதற்கு அந்த பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறக்க புதிய இடம் தேடும் பணி நடந்தது. அப்போது தெக்கலூரில் மளிகை கடை நடத்தி வரும் ஒருவர், தான் புதியதாக கட்டப்பட்ட கட்டிடத்தை டாஸ்மாக் கடை திறக்க கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு தெரித்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கொடுக்க முயன்ற மளிகை கடைக்காரரின் கடை முன்பு தரையில் அமர்ந்து பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

தெக்கலூர்-நம்பியாம்பாளையம் செல்லும் ரோட்டில் கோவில், பள்ளி மற்றும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. விசைத்தறி, பனியன் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு பெண்கள் உள்பட பலர் தினமும் இந்த ரோட்டில் சென்று வருகின்றனர். மேலும் மாணவ மாணவிகள் இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்.

இந்த நிலையில் இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் மதுப்பிரியர்களால் பெண்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் தொல்லை ஏற்படும். எனவே இங்கு டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்பதை அரசுக்கு வலியுறுத்தும் வகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த அவினாசி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் டாஸ்மாக் கடை திறக்க தேர்வு செய்யப்பட்ட கட்டிடம் முன்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பில் பதாகை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அந்த பதாகையில்  “ இந்த பகுதியில் குடியிருப்புகள், கோவில்கள், பள்ளிகள் இருப்பதால், இங்கு டாஸ்மாக் கடை அமைக்க கடும் எதிர்ப்பினை பதிவு செய்கிறோம்” என எழுதப்பட்டுள்ளது.

Next Story