கரூர் அருகே தலைமை ஆசிரியராக பணி செய்து அசத்திய மாணவ–மாணவிகள்


கரூர் அருகே தலைமை ஆசிரியராக பணி செய்து அசத்திய மாணவ–மாணவிகள்
x
தினத்தந்தி 3 Feb 2020 10:00 PM GMT (Updated: 3 Feb 2020 4:18 PM GMT)

கரூர் அருகே வாய்ப்பாடு ஒப்புவித்தல் போட்டியில் மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று அசத்தினர்.

கரூர், 

கரூர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியத்தில் லிங்கத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் 4, 5–ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கணித பாடத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையிலும், கணித பாடத்தை எளிமையாக கற்கும் பொருட்டு பெருக்கல் வாய்ப்பாடு ஒப்புவித்தல் போட்டி நடத்தப்படும் எனவும், 2–ம் வாய்ப்பாடு முதல் 9–ம் வாய்ப்பாடு வரை தங்குதடையின்றி ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு பரிசாக தலைமை ஆசிரியர் நாற்காலியில் ஒரு மணி நேரம் அமர்ந்து பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என பள்ளி சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் உற்சாகம் அடைந்த மாணவ, மாணவிகள் கடந்த சில நாட்களாக வாய்ப்பாட்டினை ஆர்வத்துடன் படித்து மனப்பாடம் செய்தனர். இந்த நிலையில் நேற்று பள்ளி தலைமை ஆசிரியர் பரணிதரன் முன்னிலையில் ஆசிரியர்கள் மேற்பார்வையில் வாய்ப்பாடு ஒப்புவித்தல் போட்டி நடந்தது.


இதில் 5–ம் வகுப்பு மாணவ, மாணவிகள் லோகேஷ், ஜனனி, சத்தியபிரியா ஆகியோர் வாய்ப்பாட்டினை தங்குதடையின்றி கூறி அசத்தினார்கள். அவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சுழற்சி முறையில் தலா ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியர் பதவி வழங்கப்பட்டு, தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்து பணியாற்றினார்கள்.

பாட நோட்டுகளை ஆசிரியர் உதவியுடன் திருத்துவது, வீட்டு பாடங்களை செய்து வரக்கோரி மாணவர்களுக்கு உத்தரவிடுவது, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான நடவடிக்கை மேற்கொள்வது போன்ற சில பணிகளை அவர்கள் மேற்கொண்டனர்.

தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்தது எங்களை ஊக்குவிக்கும் விதமாக இருந்தது. இனி வரும் காலங்களிலும் நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்ந்த பதவிகளுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்வோம் என மாணவ–மாணவிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக தலைமை ஆசிரியர் பரணிதரன் தெரிவிக்கையில், இது போன்ற செயல்பாட்டால் மாணவர்களுக்கு உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை வளரும் என்று நம்புகிறேன்.

மேலும் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட மாணவர்களுக்கு நாமும் வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை ஏற்பட இந்த நிகழ்வு காரணமாக அமையும். இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் இது போன்ற கல்விசார் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் தலைமை ஆசிரியர் நாற்காலியில் அமர்ந்து பணி செய்யும் வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

Next Story