சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கால்டாக்சி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் புகார்


சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கால்டாக்சி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 10:54 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கால்டாக்சி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

நாமக்கல்,

திருச்செங்கோட்டை சேர்ந்த சுற்றுலா வாகன டிரைவர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் மெகராஜிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :-

திருச்செங்கோட்டில் நாங்கள் சுற்றுலா வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் வைத்து வாடகைக்கு ஓட்டி தொழில் செய்து வருகிறோம். தற்போது எங்களது வாழ்வாதாரம் பாதிப்படையும் வகையில் மினி கார்ப்பரேட் கம்பெனிகள் தற்காலிக அலுவலகம் தொடங்கி, மிக குறைந்த கட்டணத்தில் கால் டாக்சியை வாடகைக்கு ஓட்டி வருகிறார்கள்.

இதனால் உள்ளூரில் இந்த தொழிலை நம்பி இருக்கும் சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் என சுமார் 1,000 குடும்பங்களின் வாழ்க்கை கேள்விகுறியாகி உள்ளது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

கால் டாக்சியை மாவட்ட தலைநகர் மற்றும் மாநகராட்சிகளில் ஓட்டுவதற்கு மட்டுமே அரசு அனுமதி உள்ளது. ஆனால் இவர்கள் சட்டத்திற்கு புறம்பாக சிறிய நகராட்சியில் வைத்து ஓட்டுகிறார்கள். குறிப்பாக ஒரு கால்டாக்சி நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் அலுவலகம் வைத்து கொண்டு திருச்செங்கோட்டில் வாடகைக்கு ஓட்டி வருகிறார்கள்.

எனவே தாங்கள் கால் டாக்சிகளை மாநகராட்சிகளிலும், மாவட்ட தலை நகரிலும் மட்டும் இயக்க அறிவுறுத்த வேண்டும். இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கால்டாக்சி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, எங்கள் தொழிலை காப்பாற்றிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.


Next Story