திருச்சியில் 21-ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் கி.வீரமணி பேட்டி


திருச்சியில் 21-ந் தேதி குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டம் கி.வீரமணி பேட்டி
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 8:16 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி திருச்சியில் போராட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி நகர தி.மு.க. சார்பில் அரியலூர் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அமைதி ஊர்வலமானது ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவில் தொடங்கி நாலு ரோடு, கடைவீதி வழியாக சென்று அண்ணா சிலை உள்ள பகுதியில் முடிவடைந்தது.

பின்னர் அண்ணா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இதில் தி.மு.க.வின் சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினர் சுபா.சந்திரசேகர், நகர செயலாளர் கருணாநிதி, திராவிடர் கழகத்தின் மண்டல தலைவர் காமராஜ் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் கி.வீரமணி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

சிறை நிரப்பும் போராட்டம்

மத்திய பா.ஜ.க. ஆட்சி மாநிலத்தின் ஒவ்வொரு உரிமைகளையும், மக்களின் உரிமைகளையும் பறித்து வருகிறது. மக்கள் இந்த ஆட்சியை எதிர்த்து நடத்தும் போராட்டம் விரைவில் வெற்றி பெறும். நீட் தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம், புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில், திருச்சியில் வருகிற 21-ந் தேதி போராட்டம் நடத்தப்படும். அதற்கு பின்னரும் மத்திய அரசு அந்த குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை திரும்ப பெறாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். இதில் ஒத்த கருத்துடைய அனைவரும் கலந்து கொள்வார்கள்.

உலகம் முழுவதும் பிரதமர் சுற்றினாலும் போதிய முதலீடுகள் இங்கு வந்ததாகவும், வேலை வாய்ப்புகள் புதிதாக கொடுத்ததாகவும் தகவல் இல்லை. இதுவரை 7 துறைகளில் 3½ கோடி பேர் வேலை இழந்திருக்கிறார்கள். ஒவ்வொரு துறையையும் பா.ஜ.க. விற்றுக்கொண்டிருக்கிறது. நிதி மந்திரிக்கு தெரியாத ஒரு பட்ஜெட் தயாராகியிருக்கிறது. படித்தது அவர், எழுதியது, தயாரித்ததில் யாருடைய பங்கு என்பது பின்னால் தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story