மதுரையில் வேலை பார்த்த வீட்டில் 36 பவுன் நகைகளை திருடிய பெண் கைது


மதுரையில் வேலை பார்த்த வீட்டில் 36 பவுன் நகைகளை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 3 Feb 2020 11:02 PM GMT (Updated: 3 Feb 2020 11:02 PM GMT)

மதுரை பசுமலையில் வேலை பார்த்த வீட்டில் 36 பவுன் நகைகளை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

திருப்பரங்குன்றம்,

மதுரை பசுமலை ஜோன்ஸ்புரம் 1-வது தெருவை சேர்ந்தவர் பால்சாம்ராஜ் (வயது 49), கேட்டரிங் வைத்து நடத்தி வருகிறார். இவரது வீட்டில் அப்பகுதியைச் சேர்ந்த சுதா (32) என்பவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் பால்சாம்ராஜின் மனைவி திருமணத்திற்கு செல்வதற்காக நேற்று காலை பீரோவில் இருந்த நகையை எடுக்க சென்றார்.

அப்போது அதில் இருந்த 36 பவுன் நகைகளை காணவில்லை. உடனே அவர் இது குறித்து கணவரிடம் தெரிவிக்க, அவர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

வீட்டு வேலைக்கார பெண் சுதா மீது சந்தேகம் கொண்டு அவரிடம் விசாரித்தபோது நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் நகையை எங்கு வைத்துள்ளார். எப்போது திருடினார் என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் மதுரை பசுமலையில் முத்தையா தேவநேசன் என்ற பாதிரியார் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை தனது அறையின் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். இந்த நிலையில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டின் அலமாரியில் இருந்த 4 தங்க காசுகள், மோதிரம் உள்ளிட்ட 10 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

Next Story