மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு


மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு
x
தினத்தந்தி 4 Feb 2020 4:41 AM IST (Updated: 4 Feb 2020 4:41 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

ஈரோடு,

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார்.

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

கல்வி கட்டணம்

பெருந்துறையில் உள்ள சாலை போக்குவரத்து மருத்துவ கல்லூரியானது போக்குவரத்து கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இந்த கல்லூரி அரசு கல்லூரியாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கட்டுப்பாட்டில் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

கல்லூரியில் ஒரு ஆண்டுக்கு கல்வி கட்டணமாக ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. மேலும், விடுதி கட்டணமாக ரூ.81 ஆயிரம், இதர கட்டணமாக ரூ.33 ஆயிரம், நோட்டு, புத்தகம், மருத்துவ கல்வி சாதனங்களுக்கு கட்டணமாக ரூ.18 ஆயிரம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளில் ரூ.13 ஆயிரத்து 600 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனவே பெருந்துறையில் உள்ள ஐ.ஆர்.டி. அரசு மருத்துவ கல்லூரியிலும் மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே பெற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

டாஸ்மாக் கடை

ஈரோடு அருகே ஆனைக்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்ததாவது:-

ஆனைக்கல்பாளையம் ரிங்ரோடு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளதால், கடை திறக்கப்பட்டால் மது பிரியர்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும். மேலும் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடமும் செயல்பட்டு வருகிறது. எனவே புதிய டாஸ்மாக் அமைக்க உத்தரவிட கூடாது.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

செல்போன் உயர்கோபுரம்

பெருந்துறை சீனாபுரம் வீரணம்பாளையம் காந்திநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுவில், “எங்கள் பகுதியில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சீனாபுரம் குன்னத்தூர்ரோட்டில் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட மயானம் உள்ளது. 60 ஆண்டுகளாக மயானத்தை பயன்படுத்தி வருகிறோம். இந்தநிலையில் மயானத்தை சிலர் ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்றி மயானத்தை நாங்களே பயன்படுத்தி கொள்ள அனுமதிக்க வேண்டும்”, என்று கூறி இருந்தனர்.

ஈரோடு பெரியசேமூர் பச்சப்பாளிமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்களது பகுதியில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்கு செல்போன் உயர்கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. எனவே செல்போன் உயர்கோபுரம் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது”, என்று வலியுறுத்தி இருந்தனர்.

வீட்டுமனை பட்டா

சித்தோடு அருகே நல்லாகவுண்டன்பாளையம் கிராமம் கன்னிமாகாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறிஇருந்ததாவது:-

எங்கள் பகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். இதில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர்க்கு அரசின் சார்பில் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. கூலி தொழில் செய்து வரும் தங்களுக்கு பட்டா வழங்கக்கோரி ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் பலமுறை விண்ணப்பித்து உள்ளோம். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.

இதுபற்றிய அதிகாரிகளிடம் சென்று முறையிட்டோம். அப்போது குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்படும் குடியிருப்புகளில் வீடுகள் கேட்டு விண்ணப்பித்து உள்ளதால், பட்டா வழங்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நாங்கள் வீடுகள் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இதைத்தொடர்ந்து குடிசைமாற்று வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டோம். அப்போது நாங்கள் விண்ணப்பிக்காத நிலையில் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளே தன்னிச்சையாக பயனாளிகள் பெயரில் எங்களை சேர்த்து விண்ணப்பித்து இருப்பது தெரியவந்தது. எனவே இந்த விண்ணப்பங்களை ரத்து செய்து, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச பட்டா வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர்.

சமபந்தி

மொடக்குறிச்சி காந்திநகர் ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், “எங்களது பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக விவசாய களம் ஒன்றை அமைத்து, அங்கு நெல், மஞ்சள், சோளம், கடலை, எள் போன்ற பொருட்களை வைத்து பயன்படுத்தி வருகிறோம். இந்த விவசாய களத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். எனவே அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று கூறிஇருந்தனர்.

இந்து மக்கள் கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், “தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சமபந்தி நடத்தப்பட்டு வருகிறது. கோவில்களில் நினைவு தினத்தை கடைபிடிப்பது இந்து சமய ஆகம விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே நினைவு தின நிகழ்ச்சிகளை கோவில்களில் நடத்தாமல், சமுதாயக்கூடத்திலோ அல்லது அரசுக்கு சொந்தமான திருமண மண்டபங்களிலோ நடத்த வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

மாதிரி வனம்

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் கார்த்திக் கொடுத்த மனுவில், “ஈரோடு மாநகராட்சியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. மரம் வளர்ப்பு குறைந்துவிட்டது. எனவே மாநகராட்சியில் 10 வார்டுகளுக்கு ஒரு இடத்தில் மாதிரி வனம் அமைக்க மத்திய அரசின் ஸ்மார்ட் திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஈரோடு சம்பத்நகர் நசியனூர்ரோட்டில் சாலை விரிவாக்க பணியின்போது மரங்கள் வெட்டப்பட்டன. இந்த பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டதால், சாலையோரங்களில் மரக்கன்றுகளை நட்டு வைக்க வேண்டும்”, என்று வலியுறுத்தி இருந்தார்.

வெள்ளி பதக்கம்

ஈரோடு மாநகராட்சியில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப கூடுதலாக துப்பரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மதுரைவீரன் மக்கள் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் சண்முகசுந்தரம் மனு கொடுத்தார்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 112 மனுக்களை கொடுத்தனர். கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் விருப்ப கொடை நிதியில் இருந்து 3 பேருக்கு விலையில்லா தையல் எந்திரங்களும், 22 பேருக்கு விலையில்லா சலவை பெட்டிகளும் வழங்கப்பட்டன. முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடிநாளுக்கு அதிக நிதி வசூலித்ததற்காக கோபிசெட்டிபாளையம் மாவட்ட பதிவாளர் டி.பூங்கொடிக்கு வெள்ளிப்பதக்கத்தையும், தலைமை செயலாளரின் பாராட்டு சான்றிதழையும் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அதிகாரி கற்பகவள்ளி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜெகதீசன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story