டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்க தடை விதிக்க வேண்டும் ‘பார்’ உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு


டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்க தடை விதிக்க வேண்டும் ‘பார்’ உரிமையாளர்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 4 Feb 2020 12:26 AM GMT (Updated: 4 Feb 2020 12:26 AM GMT)

குமரி மாவட்டத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று ‘பார்‘ உரிமையாளர்கள் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு கொடுத்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக லூயி பிரெயிலி கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். மொத்தம் 297 பேர் மனு கொடுத்தனர்.

‘பார்’ உரிமையாளர்கள்

குமரி மாவட்ட டாஸ்மாக் பார் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜாண் தலைமையில் சிலர் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் 100-க்கு மேற்பட்ட டாஸ்மாக் பார் (மதுபானக்கூடம்) செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் கடையுடன் சேர்ந்த பாரை எங்கள் சங்க உறுப்பினர்கள் அதிக பணம் கொடுத்து ஏலம் எடுத்துள்ளனர். தற்போது சிலர் வருமானமின்றி அதை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஏற்கனவே அடைக்கப்பட்ட கடைகள் தற்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திறக்கப்படுகிறது. ஏற்கனவே செயல்பட்டு வரும் டாஸ்மாக் பார் அருகில் புதிய கடை திறந்து வருகின்றனர். இதனால் பெரும்பாலானவர்கள் பாரை நஷ்டத்தில் நடத்தி வருகின்றனர். எனவே குமரி மாவட்டத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தகர்கள் மனு

இதேபோல் கோட்டார் வர்த்தகர் சங்க தலைவர் நாகராஜன், செயலாளர் ஸ்ரீகிருஷ்ண பெருமாள், பொருளாளர் நாராயணன் உள்ளிட்டவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோட்டார் வணிக பகுதியை நம்பி ஏராளமானோர் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் 1-2-2020 முதல் கோட்டார் வணிக பகுதியில் வாகனங்கள் மூலம் பாரம் ஏற்றி, இறக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வதற்கு வழிவகுக்கும். தற்போது தமிழக அரசு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த முற்படும்போது, கோட்டார் வணிக பகுதியில் பாரம் ஏற்றி இறக்க வாகனங்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்திருப்பது வேலை இல்லாத திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு துணையாக அமைந்துவிடும். எனவே தடை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி இணை செயலாளர் ராகுல் தலைமையில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை தாலுகாக்களுக்கு உட்பட்ட பாலமோர் சாலையில் புத்தேரி முதல் தடிக்காரன்கோணம் வரையிலான பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தினரால் தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பும், ஆங்காங்கே விபத்துகளும் நடந்த வண்ணம் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள்

பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது முதல்-அமைச்சரின் பொது நிவாரணை நிதியில் இருந்து பணியின் போது மின்சாரம் தாக்கி இறந்த மின்வாரிய ஊழியர் ராபர்ட்டின் மனைவி பிந்துவுக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையையும், நீரோடியை சேர்ந்த லூர்துராஜ் என்பவர் படகு விபத்தில் இறந்ததற்காக அவருடைய மனைவி சாந்தல்மேரிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், ஏழுதேசம் ‘இ’ கிராமத்தை சேர்ந்த அருளஸ் என்பவர் படகு விபத்தில் இறந்ததற்காக அவருடைய மனைவி பியாட்ரிசுக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும், கொல்லங்கோடு ‘ஆ‘ கிராமத்தை சேர்ந்த சகாயம் என்பவர் படகு விபத்தில் இறந்ததற்காக அவருடைய தாயார் சிசிலிக்கு ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே வழங்கினார்.

மேலும் திறன் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அபுல் காசிம், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சுவர்ண லதா, உதவி இயக்குனர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை) ஜார்ஜ் பிராங்களின் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story