கொரோனா வைரஸ் குறித்து குமரி கலெக்டருடன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை காணொலி காட்சி மூலம் நடந்தது


கொரோனா வைரஸ் குறித்து குமரி கலெக்டருடன், அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை காணொலி காட்சி மூலம் நடந்தது
x
தினத்தந்தி 4 Feb 2020 5:56 AM IST (Updated: 4 Feb 2020 5:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தொடர்பாக குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தக்கலை, குழித்துறை அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனைத்து மாவட்ட அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த ஆலோசனையின் போது கலெக்டர் பிரசாந்த் வடநேரே, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி நல அலுவலர் கின்சால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பாதிப்பு இல்லை

அப்போது மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விவரம் கேட்டறிந்தார். பின்னர் படக்காட்சிகள் மூலமும் கொரோனா வைரஸ் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே இதுகுறித்து மக்கள் பீதியடைய தேவையில்லை. அதேநேரத்தில் இந்த வைரஸ் குறித்து மக்களிடையே அதிக அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

துண்டு பிரசுரம் வினியோகம்

இந்த ஆலோசனை தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாளை (அதாவது இன்று) முதல் மக்கள் கூடும் இடங்களான கடைவீதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளன. சீனாவில் இருந்து வருபவர்களுக்கு தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் முதல் கட்ட சோதனை நடத்தப்பட்ட பிறகுதான் அவர்களை வெளியே அனுப்புகிறார்கள். அறிகுறிகள் இல்லாத பட்சத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story