தேவதானப்பட்டியில், குடிசை தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சியில் தொழிலாளி சாவு
தேவதானப்பட்டியில் குடிசை தீப்பிடித்து எரிந்த அதிர்ச்சியில் தொழிலாளி இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தேவதானப்பட்டி,
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி டி.வி.நகரை சேர்ந்தவர் காமராஜ் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா (32). இவர்களுக்கு முத்துமாரி (7) என்ற மகள் இருக்கிறாள். காமராஜ், தனது மனைவி, மகளுடன் அப்பகுதியில் குடிசையில் வசித்து வந்தார். அவரது வீட்டில் மின்சார வசதி கிடையாது. இதனால் இரவு நேரங்களில் மண்எண்ணெய் விளக்கை எரியவிட்டு அவர்கள் தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு காமராஜ், அவரது மனைவி, மகள் ஆகியோர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் திடீரென்று அவர்களது குடிசை தீப்பிடித்தது. இதனால் திடுக்கிட்டு கண்விழித்த காமராஜ், அவரது மனைவி, மகள் வெளியே சென்று உயிர்தப்பினர்.
இதுகுறித்து பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், குடிசையில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அந்த குடிசை முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்த புகாரின்பேரில் மண்எண்ணெய் விளக்கு சாய்ந்து விழுந்து தீப்பிடித்ததா? அல்லது யாரேனும் வீட்டிற்கு தீவைத்தார்களா? என்ற கோணத்தில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தனது குடிசை எரிந்துபோன அதிர்ச்சியில் இருந்து மீளாத காமராஜ், நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தார். குடிசை எரிந்து போன அதிர்ச்சியில் தொழிலாளி இறந்துபோன சம்பவம் தேவதானப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story