கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 6 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது


கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 6 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
x
தினத்தந்தி 5 Feb 2020 3:45 AM IST (Updated: 4 Feb 2020 7:04 PM IST)
t-max-icont-min-icon

கொல்லங்கோடு அருகே கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 6 டன் ரே‌ஷன் அரிசியை உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொல்லங்கோடு, 

ரே‌ஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களை சிலர் வாங்கி அதை கேரள மாநிலத்துக்கு வாகனங்களில் கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து செய்து வருகிறார்கள். இதை தடுப்பதற்காக பறக்கும்படை அதிகாரிகளும், மாவட்ட உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் நேற்று காலை 11 மணியளவில் நாகர்கோவில் உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கோபகுமார் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக குளிர்சாதன வசதியுடன் மீன்கள் ஏற்றி செல்லும் லாரி வந்தது. கோபகுமார் அந்த லாரியை நிறுத்தும்படி சைகை காட்டினார். ஆனால், டிரைவர் நிறுத்துவது போல் பாவனை செய்து விட்டு நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.

இதனால், சந்தேகமடைந்த கோபகுமார் தனது மோட்டார் சைக்கிளில் லாரியை விரட்டி சென்றார். சுமார் 4 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்று சூழால் சோதனை சாவடியில் வைத்து லாரியை மடக்கி பிடித்தார்.

 பின்னர், லாரியை பின்பகுதியை திறந்து பார்த்தபோது, அதில் மீன்கள் வைக்கும் பெட்டிக்குள் சாக்குகளில் ரே‌ஷன் அரிசிகள்பதுக்கி வைத்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. லாரியில் மொத்தம் 6 டன் ரே‌ஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதனை கேரளாவுக்கு இதனை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் லாரியையும், அரிசியையும் பறிமுதல் செய்தார். பின்னர், அவற்றை கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தில், லாரியின் டிரைவரான அருமனை குட்டைக்கோடு பகுதியை சேர்ந்த பிரின்ஸ் (வயது 37) என்பதும், ரே‌ஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரின்சை கைது செய்தனர்.

Next Story