பள்ளிப்பட்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்


பள்ளிப்பட்டில்   குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம்
x
தினத்தந்தி 5 Feb 2020 3:30 AM IST (Updated: 4 Feb 2020 10:41 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகர தி.மு.க. சார்பில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

பள்ளிப்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவீந்திரா தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜோதிகுமார் முன்னிலை வகித்தார். பஜார் தெரு, மேற்கு தெரு, பேரித்தெரு, பிரதான சாலை, நகரி ரோடு, சோளிங்கர் ரோடு, ஆஞ்சநேய நகர், ராதாநகர் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடம் சென்று கையெழுத்து பெற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி நகர தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணகெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு எனும் மும்முனை சட்டத்தை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி ஆரணி பஸ் நிறுத்தம் அருகே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளுக்கு, ஆரணி நகர தி.மு.க. செயலாளர் ஜி.பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ம.தி.மு.க. நகர செயலாளர் மணி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வக்கீல் சுகுமார் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
1 More update

Next Story