நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு கிராமமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு


நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு கிராமமக்கள் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2020 4:30 AM IST (Updated: 5 Feb 2020 2:01 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடியில் நெல்கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கரு.கீழத்தெரு ஊராட்சியில் குடும்பிவயல் கிராமம் உள்ளது. காவிரி பாசனப் பகுதியான இந்த கிராமத்தை சுற்றி நூற்றுக்கணக்கான ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க குடும்பிவயல் கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்ட பகுதியில் சுமார் 6 ஆயிரம் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்து விற்பனைக்காக குவித்து வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று மாலை நுகர்பொருள் வாணிக கழக ஊழியர்கள் நெல் கொள் முதல் நிலையம் வேறு பகுதிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், இங்கு நெல் கொள்முதல் செய்யப்படாது எனவும் தெரிவித்தனர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் நேற்று மாலை கறம்பக்குடி தாலுகா அலுவலகத்திற்கு எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது நெல் கொள்முதல் நிலையத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கோ‌‌ஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து சாலை மறியலை கிராமமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story