தூத்துக்குடியில் வாழ்க்கைத்தரம் குறித்து பொதுமக்கள் கருத்து பதிவு செய்யலாம் ஸ்மார்ட் சிட்டி மேலாண்மை இயக்குனர் தகவல்
தூத்துக்குடி நகரில் வாழ்க்கைத்தரம் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என்று ஸ்மார்ட் சிட்டி நிறுவன மேலாண்மை இயக்குனர் வி.பி.ஜெயசீலன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி,
உள்ளாட்சி அமைப்புகளில் நகர்ப்புற உள்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்துக்கு இணையாக மேம்பாடு செய்யும் வகையில், இந்தியாவில் 100 சீர்மிகு நகரங்களை உருவாக்க மத்திய அரசு சீர்மிகுநகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளை சீர்மிகு நகரங்களாக மாற்றுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டது. இங்கு ரூ.1,000 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இதில் ரூ.600 கோடி மதிப்பில், மழைநீர் வடிகால் வசதி, பூங்காக்கள், மின்விளக்கு வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் ரூ.20 கோடி மதிப்பிலான பணிகள் முழுமையாக முடிந்து உள்ளது. ரூ.300 கோடி மதிப்பிலான பணிகளுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஜெயராஜ் ரோடு, வி.இ.ரோடு உள்ளிட்ட சாலைகளில் மொத்தம் 10 கிலோ மீட்டர் தூரம் ஸ்மார்ட் ரோடு அமைக்கப்படுகிறது. இந்த ரோட்டின் இருபுறமும் நடைபாதைக்கான இடம் ஒதுக்கப்படும். மின்சார ஒயர்கள் பூமிக்கு அடியில் செல்லும்.
இந்த திட்டங்கள் மூலம் நகரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கும், அவற்றின் செயல்திறனை திட்டமிடுவதற்கும், செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் இரண்டு மதிப்பீட்டை தொடங்கி உள்ளது. ஒன்று, நகரின் வாழ்க்கைத்தரம் மதிப்பீடு, மற்றொன்று மாநகர செயல்திறன் குறியீடு ஆகும். இந்த இரண்டு குறியீடுகளும் 100 சீர்மிகு நகரங்களில் உள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை மதிப்பிடுவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதில் நகரின் வாழ்க்கைத்தரம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது. இந்த கருத்தாய்வு குறித்த கணக்கெடுப்பு கடந்த 1-ந்தேதி முதல் வருகிற 29-ந்தேதி வரை நடத்தப்படுகிறது.
மாநகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், பூங்காக்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் ஆகிய 30 முக்கிய இடங்களில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட உள்ளன. அதில் உள்ள கியூ.ஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தோ, இணையதள பக்கத்துக்கு சென்றோ மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இதில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வாழ்க்கைத்திறன், சமூக மேம்பாடு, குழந்தைகளுக்கான கல்வி மேம்பாடு, பெண்கள் பாதுகாப்பு, சீரான குடிநீர், மின்சாரம் வினியோக பயன்பாடு போன்ற 24 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான பதில்களை தேர்வு செய்து பதிவிட வேண்டும். இந்த தகவல்கள், தூத்துக்குடி சீர்மிகு நகர திட்டப்பணிகளை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிப்பணிகளை சீராக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.
எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வு அமைப்பினர் இந்த கணக்கெடுப்பின் மூலம் உங்கள் மதிப்புமிக்க கருத்துகளை மேற்படி குறியீடுகளில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story