ஓசூரில் நடந்த தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கொடுமுடி கோர்ட்டில் சரண்


ஓசூரில் நடந்த தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கொடுமுடி கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:15 PM GMT (Updated: 4 Feb 2020 9:00 PM GMT)

ஓசூரில் நடந்த தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கொடுமுடி கோர்ட்டில் சரண் அடைந்தார்கள்.

ஈரோடு,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள இமாம்பாடாவை சேர்ந்தவர் மன்சூர்அலி (வயது 49). தொழில் அதிபர். மேலும் தி.மு.க. மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளராகவும் இருந்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி மாலை 5 மணி அளவில் ஓசூர் காமராஜ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி சென்றார். சிறிது நேரம் கழித்து அங்குள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து ஓய்வு எடுத்தார்.

சரமாரி வெட்டு

அப்போது மைதானத்துக்குள் 2 மோட்டார்சைக்கிளில் 5 பேர் ெஹல்மெட் அணிந்தபடி வந்து இறங்கினார்கள். பின்னர் வேகமாக ஓடிவந்து மன்சூர்அலியை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். உடனே மோட்டார்சைக்கிளில் மின்னலாய் மறைந்துவிட்டார்கள்.

மைதானத்துக்குள் நடை பயிற்சி மேற்கொண்டு இருந்தவர்கள் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். அதில் சிலர் ஓடிவந்து மன்சூர் அலியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மன்சூர்அலி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

கடத்தல்

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மன்சூர்அலியின் நண்பரான ஓசூர் ராம் நகரை சேர்ந்த தொழில் அதிபர் ஜான்பாட்ஷாவும், மன்சூர்அலியும் நடை பயிற்சி சென்றிருந்தார்கள். அப்போது ஒரு கும்பல் இருவரையும் கடத்திச்சென்று, லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் அவர் கடத்தி வைக்கப்பட்டு இருந்த இடத்தை போலீசார் சுற்றிவளைத்தனர். உடனே கடத்தல் கும்பல் மன்சூர்அலியையும், ஜான்பாட்ஷாவையும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றுவிட்டது.

வலைவீச்சு

கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த ஜான்பாட்ஷா இறந்துவிட்டார். மன்சூர்அலி மீட்கப்பட்டு சிகிச்ைச பெற்று வீடு திரும்பினார். இதுகுறித்த வழக்கு இந்த மாதம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.

இந்த சம்பவத்தில் கொலைகாரர்களை நேரில் பார்த்த சாட்சி மன்சூர்அலி மட்டுமே. அதனால் அவரையும் அந்த கடத்தல் வழக்கில் தொடர்புடையவர்கள்தான் கொன்று இருக்கலாம் என்று போலீசார் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தார்கள்.

4 பேர் சரண்

இந்தநிலையில் மன்சூர்அலி கொலை வழக்கில் போலீசார் தேடி வரும் பிரபல ரவுடி கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திநகரை சேர்ந்த காஜா என்கிற ஞானேந்திரன் (37). சந்தோஷ்குமார் (22), கிருஷ்ணகிரி ராம் நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (23), கிருஷ்ணகிரி மருசாந்தப்பள்ளியை சேர்ந்த வசந்தகுமார் (23) ஆகிய 4 பேர் நேற்று மதியம் ஈரோடு மாவட்டம் கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சபீனா முன்னிலையில் சரண் அடைந்தார்கள். இதைத்தொடர்ந்து 4 பேரையும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

ஓசூரில் நடந்த தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உள்பட 4 பேர் கொடுமுடி கோர்ட்டில் சரண் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story