நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் முறைகேடு: கடலூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் முறைகேடு: கடலூரில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 5 Feb 2020 4:30 AM IST (Updated: 5 Feb 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி கடலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர்,

நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்ததாகவும், அதற்கு காரணமான தேர்தல் அதிகாரியை கண்டித்தும் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க.சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் கார் நிறுத்தம் அருகில் நேற்று நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கணேசன் தலைமை தாங்கினார். சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரியை கண்டித்தும், ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தலை மீண்டும் நடத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மறுதேர்தல்

ஆர்ப்பாட்டத்தில் கணேசன் எம்.எல்.ஏ. பேசுகையில், நல்லூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. இதனால் அந்த ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் மறு தேர்தல் நடத்தப்பட்டு, தி.மு.க. சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர் ஒன்றியக்குழு தலைவர் ஆவார்.

மங்களூர் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலிலும் தி.மு.க. அ.தி.மு.க.வுக்கு தலா 12 கவுன்சிலர்கள் இருந்தனர். ஆனால் குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்காமல் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளனர். இதனால் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் தணிகைசெல்வன், ஆனந்தி, பாலகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, செங்குட்டுவன், கோதண்டபாணி, வெங்கட்ராமன், ராயர், கோவிந்தசாமி, ராதாகிருஷ்ணன், வேல்முருகன், நகர செயலாளர்கள் தண்டபாணி, பக்கிரிசாமி, இளைஞரணி கருப்பசாமி உள்பட ஏராளமான தி.முக..வினர் கலந்து கொண்டனர்.

Next Story